நாட்டின் உணவு உற்பத்திக்கு தமிழகம் முக்கியப் பங்களிப்பை செலுத்தி வருகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தில் 70 விழுக்காடு வேளாண்மை மற்றும் அதுதொடர்பான தொழில்களைச்சார்ந்துள்ளது. முக்கியமான இந்தத் துறை கடந்த அதிமுக ஆட்சியில் சீரழிந்து கிடந்தது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க உருப்படியான எந்த நடவடிக்கையும் அந்த அரசு எடுக்கவில்லை. மாறாக விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த சட்டப்பேரவையில் மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியது.
மக்களின் தீர்ப்பால் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிய வேளாண் சட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படமாட்டாது என்று கூறியுள்ளது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டங்களை திரும்பப் பெற மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கையாகும். உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் நியாயமானவிலையில் விற்பனை செய்து கொள்ள திமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில் அந்த சந்தைகள் முடக்கப்பட்டன. மாநில வேளாண் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஏற்கனவே இருந்த உழவர் சந்தைகள் மீண்டும் செயல்படும் வகையில் புனரமைக்கப்படும் என்றும் புதிதாக மேலும் நூற்றுக்கணக்கான உழவர் சந்தைகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது நல்ல அறிவிப்பாகும்.
மாநிலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் விற்பனை செய்யும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத்தரவேண்டும். சிண்டிகேட் அமைத்துக்கொண்டு குறைந்தவிலைக்கு சில வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டுவதைத் தடுக்கவேண்டும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளுக்கு நியாயமான விலை நிர்ணயம்செய்யவேண்டும். காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலையை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளதைப் போன்று தமிழகத்திலும் நிர்ணயிக்க வேண்டும். கரும்பு பயிரிடும் விவசாயிகள் சர்க்கரை ஆலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கரும்புவிநியோகம் செய்த விவசாயிகளுக்கு 24 சர்க்கரைஆலைகள் ரூ.1,215 கோடி நிலுவைத்தொகையை பாக்கி வைத்துள்ளன. இந்த தொகையைப் பெற்றுத்தரவேண்டியது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்.
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். அவர்களையும் அவர்களது விளைபொருட்களையும் பாதுகாக்க பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். மாநிலத்தில் இயற்கை உரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் நிலங்களின் பரப்பு மிகவும் சொற்பமாக உள்ளது. மண் வளத்தையும் விவசாயிகள் உற்பத்திசெய்துதரும் விளைபொருட்களை பயன்படுத்தும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இயற்கைவேளாண்மைக்கு கூடுதல் முக்கியத்துவம்தர வேண்டும். இயற்கை முறை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருட்களை கூடுதல் மானிய விலையில் வழங்குவதன் மூலமாக இத்தகைய விவசாயத்தை ஊக்கப்படுத்தலாம். இவை அனைத்தையும் வரும் பட்ஜெட்டில் மாநில அரசு அறிவிப்புகளாக வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே நிலவுகிறது.