tamilnadu

img

பெருந்தொற்று காலத்துப் பெருங்கொடுமை...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (செப்.14) மக்களவை இரண்டு மிக முக்கியமானமசோதாவை விவாதத்துக்கு  எடுத்துக் கொண்டது.தேசிய ஹோமியோபதி ஆணையம், மற்றும் இந்திய மருத்துவங்களுக்கான ஆணையம் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் தான் அவையிரண்டும்.தேசத்தின் சுகாதாரத்தில் மிக முக்கிய பங்களிப்பு செலுத்தும் இந்த மசோதாவை இன்றைய ஆளுங்கட்சி அணுகியவிதம் யாரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடியது. 

தேசிய ஹோமியோபதி ஆணையம்
ஏற்கனவேயிருந்த ஹோமியோபதி கவுன்சில் உள்ளிட்ட ஜனநாயகப் பூர்வமானஅமைப்புகள் அவசரச்சட்டம் மூலம் கலைக்கப்பட்டுவிட்டன. அதைச் சட்டப்பூர்வமானதாக்கி முழு அதிகார மையமாக ஆணையத்தை ஏற்படுத்துவதே இந்தச் சட்டமுன்வரைவின் நோக்கம்.ஏற்கெனவே இருந்த கவுன்சில் அமைப்பில்ஓரிரு நியமன உறுப்பினர்கள் தவிர மற்ற எல்லா உறுப்பினர்களும் ஜனநாயகப்பூர்வ மாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. ஆனால்புதிய ஆணையத்தில் இரண்டு  அல்லது மூன்று பேர் மட்டுமே  தேர்ந்தெடுக்கப்படு பவர்களாக இருப்பார்கள். மற்ற அனைவரும்நியமன உறுப்பினர்கள் மட்டுமே. ஆளுங்கட்சியின் விருப்பப் பட்டியலே ஆணையமாக இருக்கும். அது ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு எவ்வித உதவியும் செய்யாது.மிகமுக்கியமாக எம்பிபிஎஸ் படிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருப்பது போன்ற தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட்) இதன் மூலம் ஹோமியோபதி படிப்பிற்கும்கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக, மூன்று விதமான தேர்வுகள் கொண்டுவரப்படுகின்றன.

முதலாவதாக, பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேசிய அளவிலான நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஹோமியோபதி கல்லூரியில் சேர முடியும். இரண்டாவதாக, கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும், தேசிய அளவிலான ‘எக்சிட்’ தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகச் செயல்பட முடியும், அடுத்த மருத்துவ முதுகலைப் படிப்பிற்கும் தேசிய அளவில் நீட் தேர்வு எழுத வேண்டும். பொருளாதாரம், கல்விச்சூழல், சமூகநிலை ஆகியவை சார்ந்து, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் அலோபதி மருத்துவம் பயில்வதைத் தடுக்கும் நீட் தேர்வு எந்தெந்தக் காரணங்களால் எதிர்க்கப்படுகிறதோ அந்தக் காரணங்கள் ஹோமியோபதி மருத்துவத்திற்கான நீட் தேர்வுக்கும் பொருந்தும்.

இந்திய மருத்துவங்களுக்கான ஆணையம்
இரண்டாவது மசோதா இந்திய மருத்துவங்களுக்கான ஆணையம். இந்திய மருத்துவத்தின்பால் அக்கறையுள்ள ஒரு நடவடிக்கையாக வெளித்தோற்றத் துக்குத் தெரியும் இம்மசோதாவின் உள்ளே நிறைந்திருப்பது பாஜகவின் ஒற்றை அரசியலே.ஆயுஷ் என்பது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் யோகா, சித்த மருத்துவம்,யுனானி, திபெத்திய சவ்பா ரிக்பா மற்றும் ஹோமியோபதியின் கூட்டு அமைப்பு. இந்த மசோதாவில் இந்த ஆறு இந்திய மருத்துவ முறைகளில் ஆயுர்வேதம் மட்டும் முன்னிறுத்தப்படக்கூடிய முன்னெடுப்புக்கள் உள்ளன.

இந்த மசோதாவின்படி அமைக்கப்பட உள்ள வாரியத்தில் ஆயுர்வேதத்துக்கு தனி வாரியமும், சித்தா, யுனானி, ஹோமியோ என பிற அத்தனைக்கும் சேர்த்து ஒரு வாரியமும்அமைத்திருப்பது முற்றிலும் பாரபட்சமானது. ஆயுர்வேத- சஸ்கிருத முன்னெடுப்பே இவற்றின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.இந்த மசோதாவில் சுழற்சி முறையில் மாநிலம் வாரியாக உறுப்பினர்கள் ஒவ்வொரு மருத்துவ துறைக்கும் நியமிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியான பட்சத்தில்சித்த மருத்துவத்துக்கான உறுப்பினர் தமிழகத்திற்கு வாய்ப்பு வரும்போது மட்டுமே கிடைக்கும். ஆனால் ஆயுர்வேதத்துக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கும். ஒருவேளை இச்சுழற்சியில் 30 வருடத்துக்கு ஒருமுறை மட்டும் ஒரு சித்த மருத்துவர் தேர்ந்தெடுக்கும் அவல நிலை ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால் ஆயுஷ் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவங்களுக்கான மசோதாவாக இது இல்லாமல் ஆயுர்வேதத்துக்கான மசோதாவாகவே இருக்கிறது.

ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவமுறைகளுக்கான ஆயுஷ் அமைப்பின் செயலாளராக ஒரு ஆயுர்வேத வல்லுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவே தொடரும் என்றால், அவ்வாறு நியமிக்கப்படுகிறவர் இதர மருத்துவ முறைகளைப் புறக்கணிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம். அதற்கான சிறந்த உதாரணத்தை சமீபத்தில் பார்த்தோம். ஆயுஷ் அமைப்பின் தற்போதைய செயலாளர் ராஜேஷ் கோடேச்சா. இவர்தான் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் தொடர்பான இணையவழி பயிற்சி வகுப்புகள்தொடங்கியபோது, பயிற்சி விவரங்களும் பயிற்சியும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதுபற்றிக் குறிப்பிட்டபோது, “இந்தி தெரியாத வர்கள் வகுப்பிலிருந்து வெளியேறிவிடலாம்” என்றும், அவ்வாறு சொன்னவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியவர். 

ஒவ்வொரு மருத்துவத்திற்கும் தனித்தன்மைகள் உண்டு. அவற்றைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பதே அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தி, சமஸ்கிருதம், ஆயுர்வேதம் என்ற அடிப்படையில் மட்டும் இந்திய மருத்துவங்களை வகைப்படுத்துவதும், வளர்த்தெடுப்பதுமே இம்மசோதாக்களின் நோக்கமாக உள்ளது.ஆயுர்வேதத்தைத்தவிர பிற இந்திய மருத்துவங்கள் அனைத்தையும் இரண்டாம் நிலையாக்குகிற, “நீட்” “எக்சிட்” என்ற பெயரில் சமூக நீதியை சிதைக்கிற நோக்கம் கொண்டதாகவே இம்மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.130 கோடி மக்களைக்கொண்ட ஒரு நாட்டின்நாடாளுமன்றம் இவ்விரண்டு முக்கிய மசோதாக்களின் மீது வெறும் 25 நிமிடம் மட்டுமே விவாதித்தது என்றால் அது எவ்வளவு பெரிய கொடுமை.உலகப் பெருந்தொற்றாக கோவிட்-19 மாறியுள்ள நிலையில் ஒவ்வொரு மருத்துவ முறைகளைப்பற்றியும் ஆழ்ந்த அறிவோடு நுண்ணிய நோக்கோடு ஆய்ந்தறிய வேண்டிய இந்திய நாடாளுமன்றத்தில் இவ்விரண்டு மசோதாவின் மீதும் பேச அனுமதிக்கப்பட்டவர் ஐவர் மட்டுமே. வெறும் 25 நிமிடத்துக்குள் தனது நடவடிக்கை யை சுருக்கிக்கொண்டு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார் சபாநாயகர்.

;