tamilnadu

img

ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு... சு.வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்

புதுதில்லி:
ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார். 

“ரயில்வே பின்க் புத்தகத்தில் (Pink book) உள்ள 2019-20 வரையில் ஒப்புதல் பெற்று பெருமளவில் பணி துவக்கப்படாத திட்டங்கள், 2018-19, 2019-20 ஆம்ஆண்டுக்கான வெவ்வேறு இடங்களிலான பணிகளை இணைக்கிற குடைத் திட்டங்கள் ஆகியன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா?” என்று  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் (கேள்வி எண் 1731)கேள்வி எழுப்பினார்.இதற்கு  அமைச்சர் பதிலளிக்கையில், “ஆமாம். இந்தநிதியாண்டு இறுதி வரை புதியதிட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் பாதுகாப்பு மற்றும் அவசரப்பணிகள் மட்டும்நிறுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே மேம்பாடு-வேலை உருவாக்கத்தை பாதிக்கும்இதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “ரயில்வே திட்டங்கள் நிறுத்திவைக்கப்படுவது வருந்தத்தக்க முடிவு. ரயில்வே மேம்பாட்டுத்திட்டங்கள் இந்த நிதியாண்டுமுழுவதும் நிறுத்தப்படுவதென்பது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி, வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும். இந்தியா மிகப் பெரும் வேலையிழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போதுஅரசு முதலீடுகளை அதிகரிக்கவேண்டும், வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டுமென்பதே சரியாக இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ள திட்டங்களையே முடக்குவது என்பது எதிர் திசையில் பயணிப்பதாகும். இது ஏழை எளிய குடும்பங்களை, இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கக்கூடியதாகும். மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்குவதன் மூலம் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது இன்றையநெருக்கடியை எதிர்கொள்ள அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.