tamilnadu

img

தங்கம் வென்ற கோமதிக்கு திமுக ரூ.10லட்சம், காங்கிரஸ் ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி மாவட்டத்தில் உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதியின் தந்தை மாரி முத்து, ஒரு பண்ணையில் கூலித் தொழிலாளியாக இருந்தவர். கோமதிக்கு ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்து சிறுவயது முதலே அவருக்கு பயிற்சி அளித்துள்ளார். ஏழ்மையான நிலையிலும் தன் மகளின் விளையாட்டு ஆர்வத்தை அவர் ஊக்கப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டுமுதல் பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் மாரிமுத்து சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். அவரைத் தொடர்ந்து கோமதிக்கு சிறு வயது முதல் பயிற்சி யளித்து வந்த பயிற்சியாளரும் காலமானார்.

அடுத்தடுத்து தனக்கு ஏற்பட்ட இரு இழப்பு களையும் சமாளித்து முன்னேறிய கோமதி, தற்போது தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து(30), 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். ஏற்கெனவே, தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார். இந்நிலையில் வெள்ளியன்று தமிழகம் திரும்பி கோமதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரோ அல்லது மற்ற துறைசார்ந்த அமைச்சர்களோ கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவிக்க விமான நிலையம் வரவில்லை என்று விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம்பேசிய கோமதி மாரிமுத்து தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று தங்கம் வெல்வேன் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று கோமதிக்கு  திமுக சார்பில் 10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜ்க்கு திமுக சார்ப்பில் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 


;