tamilnadu

img

பாசன வாய்க்கால் கரை உடைந்து பல நூறு ஏக்கர் வயல்களை சூழ்ந்த நீர்... ரூ.50 லட்சம் அறுவடைப் பயிர்கள் சேதம்

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே பாசன வாய்க்கால் உடைப்பு காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்துதண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 16 தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கல்லணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், தஞ்சை மாவட்டம் ஆவணம் அருகே கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை மதியம் வந்து சேர்ந்தது. இங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதி பாசனத்துக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தஞ்சை- புதுக்கோட்டை மாவட்ட எல்லையான, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த வேம்பங்குடி- பைங்கால் அருகே கரையில் சுமார் 30 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டுதண்ணீர் அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்தது. மேலும் புதுக்கோட்டைமாவட்டம் மேற்பனைக்காடு செல்லும்சாலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சவுக்கு தடுப்புகள், மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

கரை உடைப்பு காரணமாக இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த எள், கரும்பு, உளுந்து உள்ளிட்டபயிர்கள் சேதமடைந்தன. இவற்றின்மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கலாம்என இப்பகுதி விவசாயிகள் தெரிவித் துள்ளனர். மேலும், நெல் நாற்றுகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இப்பகுதி வயல்வெளிகள் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 

கல்லணைக் கால்வாய் 
சுமார் 148.65 கி.மீ நீள கல்லணைக்கால்வாய் மூலம் 694 பாசனக் குளங்கள்,ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு 2.21 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆரம்பத்தில் 4 ஆயிரம் கன அடி வரை கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கரைகள் பலமிழந்து காணப் பட்டதையடுத்து பின்னர் 2500 கன அடியாக குறைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் கல்விராயன்விடுதி, மேலஉளூர் ஆழியவாய்க்கால் ஆகிய இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டதால் தற்போது 1500 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கரைகள் வலுவிழந்த நிலையில் இருந்ததும், தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், பாசன வாய்க்காலில் அடித்து வரப்பட்ட, மரங்கள், குப்பைகள், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு தொட்டிப் பாலத்தில் அடைபட்டு, தண்ணீர் செல்ல வழியின்றி எதிர்த்து, திரும்பியதால் கரைஉடைப்பு ஏற்பட்டதாகவும், பொதுப் பணித்துறை அலுவலர்கள் இதனை பார்வையிட்டு சரி செய்யாததே காரணம்என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:“தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம்சார்பில், டெல்டா மாவட்டங்களில்முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதாகவும், மராமத்து பணிகள் முறைகேடின்றிநடைபெற்றுள்ளன என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித் துறை, கவனம் செலுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தூர்வாரும் பணியில் தொடர்ந்து அக்கறை செலுத்தியும், எவ்வாறு நடந்துள்ளது. வேலைகள் நடைபெற்றதா? பொதுப்பணித் துறைகண்காணித்ததா? தூர்வாரும் பணிகள்முறையாக நடந்திருந்தால் இந்த பாதிப்பு
ஏற்பட்டிருக்காது. கடுமையான வெள்ளகாலத்தில் கூட இந்தப் பகுதியில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதில்லை. எனவேமாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.

மேலும் கல்லணைக் கால்வாய் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கறம்பக்குடியிலிருந்து கடைமடை பகுதிமும்பாலை வரை மொத்தம் 46 கிமீ. இதில்ஆரம்ப நிலையான 4-வது கிமீ தொலைவிலேயே உடைப்பு எடுத்துள்ளதால், மீதமுள்ள 42 கிமீ தொலைவில் எத் தனை இடத்தில் உடைப்பு எடுக்குமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே 1 கோடியே 74 லட்சம் செலவுசெய்து சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்றும் கரைகள் உடைப்பெடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் அரசுவிரைந்து நடவடிக்கை எடுத்து கடைமடை பகுதி மும்பாலை வரை கரைகளைபலப்படுத்தி தண்ணீர் சென்றடைய வழிவகுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

;