தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள, பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரியில் சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, கல்கத்தா பிரேக் த்ரு சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு தலைமை வகித்தார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கதிர்வீச்சு பாதுகாப்புத்துறை தலைவர் ஆராய்ச்சி யாளர் முனைவர் வெங்கடேசன் மற்றும் பிரேக் த்ரு சயின்ஸ் சொசைட்டி சென்னை உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகளையும், எந்த வித பாதுகாப்பு உபகரணமோ அல்லது பாதுகாப்பு கண்ணாடியோ இல்லாது சூரியனைப் பார்த்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்கள். மேலும், சூரிய கிரகணம் குறித்த செயல்முறை விளக்கமும் செய்து காட்டப்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டைக் கொண்டு எவ்வாறு பார்க்கலாம் என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதனை மாணவர்கள் ஆர்வமு டன் கண்டு பயனடைந்தனர். முன்னதாக கணினி துறை தலைவர் டி.வின்சென்ட் வரவேற்றார். நிறைவாக கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் வி.விஜயராயன் நன்றி கூறினார்.