tamilnadu

காய்கறிகள், உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

தஞ்சாவூர்: கொரோனா எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 31 ஆம் தேதி வரை, தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், காய்கறிக் கடைகள், பால், பழம், மளிகை, இறைச்சிக் கடைகள் நிபந்தனைகளுடன் இயங்கும் என அரசு அறிவித்துள்ள போதிலும், பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.  இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில், காய்கறி, மளிகைக் கடைகளில் கடும் கூட்டம் இரு தினங்களாக காணப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களின், காய்கறி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை சார்ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பேராவூரணி கடைவீதியில் ஆய்வு நடத்தினார்.  பின்னர் அவர் கூறுகையில், கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்தால், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருந்துக் கடைகளில் கூடுதல் விலைக்கு முகக் கவசம், கிருமி நாசினி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆய்வின் போது வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக புதிய பேருந்து நிலையத்தில், துணை வட்டாட்சியர் கவிதா தலைமையில் பயணிகளிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.

;