tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜுன் 4-ல் தஞ்சையில் திட்டமிட்டபடி போராட்டம்

தஞ்சாவூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் வருகிற 4 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் திட்டமிட்டபடி பெருந்திரள் போராட்டம் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற உள்ளது.  

இதற்காக கட்சியின் மாவட்டச் செயலாளர் அனுமதி கேட்டு காவல்துறையில் கடிதம் வழங்கியிருந்தார். அதற்கு தஞ்சாவூர் நகரடிஎஸ்பி 18 கேள்விகள் கேட்டு நோட்டீஸ்அனுப்பியுள்ளார். இது இதுவரை இல்லாத நடைமுறையாகும். ஒன்று அனுமதி மறுக்கப்படுகிறது. இல்லையென்றால் அனுமதிக்கப்படும் என்று தான் சொல்வார்கள். இப்போது டிஎஸ்பி கொடுத்துள்ள நோட்டீஸ் என்பது அவருடைய தன்னிச்சையான உத்தரவா  அல்லது அரசின் உத்தரவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் உணர்வுப்பூர்வமாக நடைபெறும் போராட்டம். இதில் நாகை மற்றும் திருவாரூர்
மாவட்டங்களில் தினந்தோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசு இந்த திட்டத்தை விரைவுபடுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

8 வழிச் சாலை திட்டத்தை மத்திய அரசுகொண்டு வர துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக 5 மாவட்ட விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுஇதற்கு துணை போகக் கூடாது. இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் 1,900 எக்டேர் விளை நிலங்களும் 120 எக்டேர் வனப்பகுதியும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. பத்தாயிரம் பாசனக் கிணறுகள், 100 குளங்களும் 8 மலைகளும் இதனால் பாதிக்கப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. 

பாஜக தேர்தல் அறிக்கையிலேயே இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் முன்னுரிமைவழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தற்போது நடைபெறும். முகிலன் உயிரோடு இருக்கிறாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து தமிழக முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும். இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனை போர்க்கால அடிப்படையில் நீக்க தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார். 

பேட்டியின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;