tamilnadu

டெல்டா மாவட்டங்களில் அதிமுகவை எதிர்த்து  பாஜக போட்டி

 தஞ்சாவூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜகவினர் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு கட்சியினரும் ஒருவர் போட்டியிடும் இடங்களில் மற்றவர் உள்குத்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டுள்ள பாஜகவினர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.  கும்பகோணத்தில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்கு, அவர்கள் கேட்ட வார்டுகள் ஒதுக்கப்படாததால் நேரடியாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவில் சில நிர்வாகிகள் அதிமுக போட்டியிடும் இடங்களில் ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு, வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடுகின்றனர்.இதுகுறித்து, அதிமுக சார்பில் பாஜகவினருக்கு கடும் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீக்கம்
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், பாஜக தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலர் நீலகண்டன், திருவோணம் ஒன்றியம் உஞ்சியவிடுதியை சேர்ந்த பொறுப்பாளர் வி.செல்வம், மதுக்கூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் மணிகண்டன், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய செயலர் காளிதாஸ் மற்றும் குடவாசல் ஒன்றிய தலைவர் பூங்கொடி செல்வம் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அவரவர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்வதாகவும், இவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடக்கூடிய இடங்களில் பாஜகவினர் யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம்” என அறிவித்துள்ளார்.

;