tamilnadu

img

ஊமத்தநாடு வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை

தஞ்சாவூர் ஆக.27- பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த, ஊமத்தநாடு கிராமத்தில் பெரியகுளம் ஏரி விவசாய நிலங்களுக்கு மத்தியில் 354 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தின் தண்ணீரை கொண்டு, அப்பகுதி விவசாயிகள் 1000 ஏக்கர் பரப்பளவிற்கு நேரடியாகவும், மின்மோட்டார் பயன்படுத்தியும் ஊமத்தநாடு மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் செய்து வந்தனர்.  இந்நிலையில், பெரியகுளம் ஏரி 20 ஆண்டுகள் மேலாக தூர் வாரப்படாமல் உள்ளது. பல ஏக்கர் பாசனத்திற்கு, பயன்பட்டு வந்த பெரியகுளம் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. விவசாயத்திற்கும், கால்நடைகள் தாகம் தணிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல், ஆழ்துளைக் கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும் விளங்கிய பெரியகுளம், தூர் வாரப்படாமல் மண்மேடிட்டு வீணாகி இருப்பது கண்டு இப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.  இந்நிலையில் ஊமத்தநாடு பெரியகுளம் ஏரியில், தற்போது பொதுப்பணித்துறை மூலம் ஒரு வாரமாக, கடலுக்கு செல்லும் உபரிநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. பெரியகுளம் ஏரியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால், வாய்க்கால் மூலம் கடலுக்கு சென்று கலக்கும். இதுகுறித்து ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்த, பேராவூரணி கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் கோவிதரன் கூறுகையில், இந்த பெரியகுளம் ஏரியில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றார்கள்.  இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால், நீர் மட்டம் உயர்ந்து விடும். ஆழ்துளைக் கிணறுகளில் 3 ஆண்டுகள் தண்ணீர் பிரச்சனைகள் வராது. இந்த பெரியகுளம் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஊமத்தநாடு பெரியகுளம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலில் புயலால் சாய்ந்த மரங்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, நீர்வரத்து பாதைகள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் மரங்களும், புதர்களும் மண்டிய உள்ளது. 3 கி.மீ தூரம் வரை இதையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு, வரத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும்" என்றார்.

;