தஞ்சாவூர்:
இரட்டை நிர்வாக முறையை ஒழித்து, மேல்நிலைக் கல்விக்கென தெளிவான தனி பணி விதிகளை உருவாக்கி, ஒரு வழிப் பாதை பதவி உயர்வுமூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிதலைமையாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிதலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர், தஞ்சாவூர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மேல்நிலைக் கல்வி துவங்கப்பட்டு சுமார் 45 வருடங்களாகியும், இதுவரை மேல்நிலைக் கல்விக்கென தெளிவான தனி பணி விதிகள் எதுவும்உருவாக்கப்படவில்லை என தெரிய வருவது மிகுந்தவருத்தமளிக்கிறது. மேலும் பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஒவ்வொரு பணித் தொகுதிக்கும் குறைந்த பட்சம் இரண்டு பதவி உயர்வுகள் இருந்து வருகிறது. ஆனால் மே.நி.பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அடுத்த பதவி உயர்வு என்ன என்பதே தெரியாமல் இன்று வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் வாயிலாக அரசிடம் முறையிட்டும், எந்தவித முடிவும் எட்டப்படவில்லை, ஆனால் அரசின் பல்வேறு வகையானநலத்திட்டங்கள், பல்வேறு கட்டமாக நடத்தப்படும் மேல் நிலைத் தேர்வுகள், இடைநிலை தேர்வுகள் மற்றும் அரசாணை 145 ன் படி மே.நி.பள்ளிகளை குறுவள மையமாக மாற்றி பல்வேறு நிலையில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து கூடுதல் பணிச்சுமையை திணித்து, கடைநிலை ஊழியர்களின் பணியிடத்தை அரசு நிரப்பாமல் கலைத்து, அவர்களின் பணியையும் சேர்த்து பள்ளி ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்தி வரும் நிலையானது இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும், அரசானது மே.நி.பள்ளி தலைமையாசிரியர்களிடம் பணிச்சுமையை திணிப்பதில் இருக்கும் ஆர்வம், பணித் தொகுதியில் இருக்கும்பதவி உயர்வு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை என்ற அவல நிலை தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருவது வருத்தமளிக்கிறது.
விதிகளுக்குப் புறம்பானது
இந்த சூழ்நிலையில் அரசானது அரசாணை (நிலை) எண் 155 யை வெளியிட்டு மாவட்டக் கல்விஅலுவலர் பணியிடமும், மே.நி பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிடமும் ஒத்த பணியிடம் என்றுகூறிவிட்டு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் வழங்கி வருகிறது. மேலும், இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பே, மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் காலிப் பணியிடமாக ஏற்படுகின்ற போது பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற அந்தஸ்தைஇந்த அரசு வழங்கி, மே.நி.பள்ளி தலைமையாசிரியர்களின் பணிப் பதிவேட்டில் கையொப்பம் இடும் அங்கீகாரத்தை இந்த அரசு வழங்கியுள்ளது விதிகளுக்கு புறம்பான செயலாக எமது அமைப்பு கருதுகிறது.
இரட்டை நிர்வாகம் மூலம் வஞ்சனை
மேலும், ஒத்த பணித் தொகுதியில் உள்ள மே. நி.பள்ளி தலைமையாசிரியர்களும், பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலராக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் ஒரே அந்தஸ்தை பெற்றவர்களா என்பதை இன்று வரை இந்த அரசு தெளிவுப்படுத்தாமல் இரட்டை நிர்வாக முறையை கையாண்டு எம் பணித் தொகுதி சொந்தங்களை வஞ்சித்து வருகிறது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு மே. நி. பள்ளி தலைமையாசிரியர்கள் பணி மாறுதல் வரும் போது அந்த பணிக் காலத்தை ஒத்த பணித் தொகுதியான மாவட்டக் கல்வி அலுவலரின் பணிக் காலத்தோடு சேர்த்து தேர்வு நிலைக்கு கணக்கிட்டு வந்த நிலையானது தற்பொழுது மறுக்கப்பட்டு, இன்று வரை எந்த விதப் பணப் பயனும், பதவிஉயர்வும் இல்லாமல் அரசானது எங்கள் உழைப்பைஉறிஞ்சி, பணி ஓய்வு நிலைக்கு தள்ளி விடும் அவலநிலை இன்று வரை நடை முறை படுத்தி வருகிறது. இந்த காலச் சூழ்நிலையில், “மாவட்டக் கல்விஅலுவலர் பதவியை அடைவதில் மே.நி. பள்ளிதலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட குறைவுபட்ட (SHORT FALL) 50 பணியிடங்களை திரும்பவும்வழங்குவதன் மூலம் மே. நி.பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யலாம் எனவும், இப்பணியிடங்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள பதவி உயர்வு பணியிடங்களிலிருந்து வழங்கலாம்” என்றும் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில், மேல் நிலைப் பிரிவுக்கென தனி மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் வழங்கலாம் என கருணாகரன் சீராய்வுக் குழு தலைவரின் பரிந்துரையை பரிசீலிக்கலாம் என அரசாணை (நிலை) எண் 46 இருந்தும் அரசானது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், காலம்தாழ்த்தி, “பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும்” காட்டுவதுபோல் மேல் நிலைக் கல்வியின் நிலைபற்றி அறியாத உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணித் தொகுதியின் மூலம் இரட்டை நிர்வாகத்தைநடத்தி வரும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை கைவிட வேண்டுமாய் மாநிலக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறோம்.
மேலும், தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள சுயநிதி பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் மாவட்டகல்வி அலுவலர் பணித் தொகுதியின் கீழ் இருப்பதால்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் என்ற ஒரு வழிப் பாதை பதவி உயர்வு மட்டுமே சரியான தீர்வுஎன்பதை நடைமுறைப்படுத்த தமிழக அரசானது மேல்நிலைக் கல்விக்கென தெளிவான தனி பணி விதியை உருவாக்கி நிரந்தரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாய் மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.