தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இதில் தற்போது 113 கைதிகள் உள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, கலைஞர் நகரைச் சேர்ந்த 42 வயது ஆண் நபரை, மருத்துவக்கல்லுாரி காவல்துறையினர், மதுபானம் பதுக்கல் தொடர்பான வழக்கில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைப்பதற்கு முன்பாக, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனி சிறையில் அடைக்கப்பட்டார். சனிக்கிழமை வெளியான கொரோனா பரிசோதனை முடிவில், கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளை சிறை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.