அடுத்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைசேர்க்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விவசாயி மகன் ஒருவர்.விளையாட்டு வீரர்கள் நிறைந்த மாநிலமான அரியானாவின் குக்கிராமத்தில் பிறந்தவர் நீராஜ் சோப்ரா. உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரி மூன்று சகோதரர்கள். பானிபட் மாவட்டம் கந்த்ரா கிராமத்தில் விவசாயம் செய்து வரும் ஏழை விவசாயி சதீஸ்குமார் இவரது தந்தை. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.இந்த கிராமம் தலைநகர் தில்லிக்கு மிக அருகாமையில் இருந்தாலும் ஹரியானா தலைநகர் சண்டிகரில் கல்லூரியில் பயின்றவர் நீராஜ் சோப்ரா. சிறு வயதிலேயே விளையாட்டிலும் ஆர்வத்தைக் காட்டினார். அவரது மாமாவின் ஆலோசனைப்படி 13 வயதில் ஈட்டி எறியும் விளையாட்டில் கவனத்தை செலுத்தினார். சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து வந்தார். 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை தேவி லால் மைதானத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்.
பிறகு, ஜெய்வீர் சிங்கிடம் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் குவித்து வரும் இவருக்கு ஆஸ்திரேலியாவின் கேரி கல்வெர்ட் பயிற்சியளிக்கிறார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனுக்கும் ஈட்டி எறிதல் பயிற்சியை கொடுத்தவர் கேரி கல்வர்ட்.2016 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். போலாந்தில் நடந்த இந்த போட்டியில் உலக சாதனையுடன் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ‘கோல்டு மெடல்’ வென்றபோது நாடே இவரை திரும்பிப் பார்த்தது. அப்போது அவருக்கு வயது 19. 2017 ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப், தெற்காசிய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை அள்ளி வந்தார். 2018-ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்ற வீரரும் இவரே.
ஆரம்பத்தில் எல்லாம் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் ஏதோ வீசிக்கொண்டி இருந்துள்ளார். ஆனாலும், உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்திய அவர், அதை ரசித்து செய்வது வழக்கம். ஒருநாளும் உடற்பயிற்சியை தவறவிடுவதில்லை. அவர் மீது மற்றவர்கள் அதிகம் எதிர்பார்ப்பை கொண்டிருந்தார்களோ இல்லையோ? ஆனால், அவரே தன் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கினார். அதற்கு சிறந்த பலனும் கிடைத்தது. 2016 ஆம் ஆண்டில் சாதனையுடன் தங்கம் வென்றதும், மேலும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை உத்வேகம் எடுத்தார். தொடர்ந்து பதக்கம் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியும் ஈட்டி எறிதலின் கவனத்தை அதிகப்படுத்தியது. இவரது சேவைக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு அர்ஜூனா விருதும் இந்திய ராணுவம் உயர் பதவி வழங்கியும் கவுரவித்தது. மிகக் குறுகிய காலத்திற்குள் இவரது தடகள வாழ்க்கையில் தடதட வென்று வேகம் அதிகரித்து புகழின் உச்சிக்கு சென்றார்.சீனா, சீன தைபே, கத்தார், ஜப்பான் வீரர்கள் நீராஜ் சோப்ரா-வுக்கு போட்டியாக பெரும் சவாலாக உள்ளனர். 91.36 தூரத்திற்கு ஈட்டியை எறிந்த சீன தைபே வீரர் முதலிடத்தில் இருக்கிறார். இவர்களை எதிர்கொண்டு ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் ஆகிய போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்த சாதனை இளைஞரின் கனவும் லட்சியமும் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!