tamilnadu

img

ஹாமில்டன் டி-20 போட்டி : சூப்பர் ஓவர் பற்றி சுவாரஸ்ய தகவல்.. 

ஹாமில்டன் 
நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது.

5 போட்டிகளை கொண்ட தொடரின் முதலிரண்டு ஆட்டத்தில் (ஆக்லாந்து)  இந்திய அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டி-20 நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான ஹாமில்டனில் புதனன்று நடைபெற்றது.பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த சூப்பர் ஓவர் நிகழ்வு பற்றி விரிவாக காண்போம்:

20 ஓவர்கள் முடிவில் முதலில் பெட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனின் அசத்தலான (95) பேட்டிங்கால் தொடக்கம் முதலே வெற்றி பாதையில் பயணித்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.   

பின்னர் சூப்பர் ஓவர் விதிமுறை கொண்டுவரப்பட்டது. இந்திய அணியில் பும்ரா பந்துவீச நியூஸிலாந்து தரப்பில் பேட்ஸ்மேன்களாக கேப்டன் வில்லியம்சன் - குப்தில் ஆகியோர் களமிறங்கினர். முதல் இரண்டு பந்துகளில் இருவரும் ஒரு ரன் எடுத்தனர். 3-வது பந்தில் வில்லியம்சன் சிக்சர் விளாசி நியூஸிலாந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 4-வது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி விளாச இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 5-வது பந்தில் ஒரு ரன்னும் கடைசி பந்தில் குப்தில் பவுண்டரியும் அடிக்க நியூஸிலாந்து அணி 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்தது. 

6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகவும் கடினமான  இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுத்தி பந்துவீசினார். முதல் பந்தில் ரன் அவுட் கண்டத்திலிருந்து தப்பித்த ரோஹித் சர்மா 2 ரன்கள் எடுத்தார். 2-வது பந்தில் ஒரு ரன்னும், 3-வது பந்தில் ராகுல் பவுண்டரி விளாசினார். 4-வது ராகுல் 1 ரன் எடுக்க இந்திய ரசிகர்கள் நாம் தோற்பது உறுதி என எண்ணி இருக்கையை விட்டு எழுந்தனர். 2 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டுமே என சூப்பர் ஓவர் வரை போராடிய இந்திய வீரர்களும் இமைகள் அசையாமல் போட்டியை உற்றுநோக்கினர். 5-வது பந்தில் ரோஹித் சர்மா சிக்சர் விளாச இந்திய ரசிகர்கள், வீரர்கள் சுடுதண்ணீயில் விழுந்தார் போல துள்ளிக்குதித்தனர். 1 பந்தில் 4 ரன்கள் அடிக்க வேண்டும் என இக்கட்டான நிலையில், பதற்றமின்றி காணப்பட்ட ரோஹித் சர்மா கடைசி பந்திலும் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். டி-20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடும் நியூஸிலாந்து அணியை சூப்பர் ஓவரில் பணியவைத்த இந்திய அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிகிறது.    

;