“திறமைக்கு அடக்குமுறை வேலி போட முடியாது. இது நிதர்சனம். கடும் சவால்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது ஒரு சிலரே. அதில் ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு முன்மாதிரி என்றால் அது ஜெஸ்ஸி ஓவன்ஸ்”. உலகின் சர்வாதிகாரியான ‘ஹிட்லரின்’ இனவெறி கொள்கையால், 1935 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளும், வீரர்களும் தயங்கினர். அது சரியான முடிவு என்பதை அந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா சாட்சியானது. ஜெர்மனிய வீரர்களைத் தவிர வேறு எந்த நாட்டு வீரர்களுடனும் கை குலுக்காமல் சென்றதும் ஜெஸ்ஸி ஓவன்ஸ் தங்கப்பதக்கம் வென்ற போதும் கை குலுக்காமல் வெளியேறியதும் ஹிட்லரின் கருப்பின வெறியை படம் பிடித்துக் காட்டியது.
வரலாறு மாறியது....
ஒலிம்பிக் போட்டி தொடங்கி இரண்டு நாட்களை கடந்தும் கருப்பின வீரர்கள் ஒருவரும் பதக்கம் வெல்லவில்லை என்பதால் கொக்கரித்த ஹிட்லருக்கு 23 வயதான கருப்பின இளைஞர் (ஜெஸ்ஸி ஓவன்ஸ்) ஒன்றல்ல இரண்டல்ல, அடுத்தடுத்து தான் பங்கேற்ற 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டத்திலும் 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் என நான்கு தங்கப் பதக்கத்தை வேட்டையாடி சம்மட்டி அடி கொடுத்தார். இவரோடு சேர்ந்து பங்கேற்ற 18 கருப்பின வீரர்களில் பத்து பேர் பதக்கம் வென்றனர். இது வெரும் பதக்கம் பெறும் போட்டியாக மட்டும் பார்க்கப்படவில்லை. கருப்பின மக்களின் வரலாற்று வெற்றியாகவும் மறு மலர்ச்சி தினமாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த ஹிட்லர், கருப்பினத்தவர் ஆதிவாசிகள், அவர்களை மற்ற வீரர்களுடன் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் விஷத்தைக் கக்கினார். அவர் மட்டுமல்ல அன்றைய அமெரிக்க அதிபர் பிராங்கிளின் டீ ரூஸ்வெல்ட்டும் அதே மனநிலைகொண்டிருந்தார். நாட்டுக்காக பதக்கம் என்ற கருப்பின வீரர்களை மரியாதை நிமித்தமாககூட ஜனாதிபதி சந்திக்கவில்லை. பாராட்டும் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த அமெரிக்காவுக்கு இன்றும் கருப்பின வீரர்களே பதக்கங்களை குவித்து முதலிடத்துக்கு கொண்டு வருவது வரலாறு.
கருப்பின கதாநாயன்...
உலக தடகள வரலாற்றில் தனி சரித்திரம் படைத்த ஜெஸ்ஸி ஓவன்ஸ், நிலக் குத்தகைதாருக்கு மகனாகவும் ஒரு அடிமையின் பேரனாகவும் கறுப்பின குடும்பத்தில் அமெரிக்காவில் பிறந்தார். ஹென்றி-மேரி தம்பதிகளுக்கு 7 ஆண், 3 பெண் குழந்தைகள். இதில் கடைக்கோடி ஜெஸ்ஸி. கடுமையான இனவெறியை சமாளிக்க முடியாமல் வெளியேறிய ஒன்றரை லட்சம் ஆப்பிரிக்கர்களோடு ஊர் மாறிப் போகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது ஜெஸ்ஸிக்கு வயது 9. ஒலிம்பிக் போட்டியின் ஒரு தொடரில் 4 பதக்கங்களை வென்ற ஜெஸ்ஸி நாடு திரும்பியபோது அவரை வரவேற்க அமெரிக்கர்கள் ஒருவரும் வரவில்லை. அரசாங்க அமைப்புகளும் கண்டு கொள்ளவில்லை. இவ்வளவு ஏன்? அவரால் பேருந்தின் முன் பக்கம்கூட போக முடியவில்லை. காரணம் அவரது நிறம். நினைத்த இடத்தில் அவரால் வாழ முடியவில்லை. எதுவுமே மாறவில்லை என்று ஆதங்கப்பட்டார். இதனால்தான் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கருப்பின வீரர் வில்மா ரூடால் முதல் உசேன் போல்ட் என பலரும் தங்களது வெற்றியை ஜெஸ்ஸி ஓவன்ஸ்க்கு அர்ப்பணித்து வருகிறார்கள்.
எது அவமானம்?
1913 ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்த ஜெஸ்ஸி, 1935-ல் மின்னி ரூத் சாலமேனை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குளோரியா, மார்லின், பெவர்லி என்ற மூன்று மகள். நான்கு தங்கம் வென்றாலும் போதிய வருமானம் இல்லை. அரசும் வேலை கொடுக்கவில்லை. எப்படியும் வாழ்க்கையை நடத்தியாக வேண்டும் என்பதால் கால்பந்து போட்டிகளுக்கு நடுவே ஆடுகளத்தில் குதிரை, மோட்டார் சைக்கிள், நாய்களுடன் போட்டிப்போட்டு ஓடினார். அதில் கிடைத்த சொற்ப காசுதான் குடும்பத்தை காப்பாற்றியது. ஒலிம்பிக் சாம்பியனாக இருந்துகொண்டு குதிரைகளோடு போட்டி போடுவதை பலரும் அவமானம் என்றனர். தங்கப்பதக்கங்களை உண்ண முடியாது. நேர்மையான வழியில் சாப்பிட இதுதான் எனக்கு சிறந்த வழியாகும் என பதிலடி கொடுத்தார்.
மன உறுதி....
தனது முன்னோர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தியதன் தாக்கமே ஜெஸ்ஸி ஓவன்ஸ் வெற்றிக்கு ஊன்றுகோலாகும். அவரது தடகள வாழ்க்கை தேசியப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சிக்கு இடையில் ஒரு நாள் நண்பர்களோடு குத்துச்சண்டையில் பங்கேற்றபோது முதுகில் பலத்த காயமடைந்தார். அந்த சமயம், ‘முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்’ என மாநில பல்கலைக்கழக போட்டியில் ஓடத் தொடங்கினார். அவரது அசுர பாய்ச்சல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இரண்டு உலக சாதனைகளையும் சமன் செய்தார். இளம் வயதில் ஓடுவதில் ஆர்வம் அதிகம் இருந்தும் சுவாசக் கோளாறு, காய்ச்சல் ஒருபுறம் ஜெஸ்ஸியை வாட்டி வதைக்க, மறுபுறம் கோரத்தாண்டவமாடிய குடும்பத்தின் வறுமை சமாளிக்க கடை சாமான்கள் டெலிவரி செய்வது, பருத்திக் கொட்டை பொறுக்குவது, வண்டிகளில் சரக்கு ஏற்றி இறக்குவது எனவும் பல்கலைக் கழக படிப்புக்காக பெட்ரோல் பங்க், ஓட்டல், லிப்ட் ஆபரேட்டர் என சிறு சிறு வேலைகளில் இளமைப்பருவம் கழிந்தாலும், ஜெஸ்ஸியின் திறமையை உணர்ந்த பயிற்சியாளர் சார்லஸ், தினமும் ஒரு வேளை மட்டுமே பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
அந்த நாள்...
“ஜெஸ்ஸி ஓவன்ஸ் தனது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பு காரணம் காட்டி 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்க முடிவு செய்தது. ஒலிம்பிக் லட்சியம் போரிலிருந்து விலகிய காலமாக கருத வேண்டும். அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரிடம் வாதிட்ட அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மனமுடைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானது. மார்ச் 31 ஆம் தேதி பிரியாவிடைபெற்றார். தன் இனத்துக்காக ஓடிய ஜெஸ்ஸின் வெற்றி ஒரு சுடர் அல்ல. தாழ்வு மனப்பான்மை ‘எரித்த சுவாலை’. நிறை வெறியையும் இன வெறியையும் எதிர்த்து தன் மக்களுக்கான அங்கீகாரம் கிடைக்க செய்த அந்த கருப்பு அவமானம் அல்ல. ஒரு இனத்தின் அடையாளம். போராளியாக இல்லாத எந்தவொரு கறுப்பின மனிதனும் குருடனாகவோ அல்லது கோழையாகவோ இருக்க முடியும். போர்க்குணம் என்பது கறுப்பின மனிதனின் தேவை என்று அன்றைக்கு ஜெஸ்ஸி கூறியது வெரும் வார்த்தை மட்டுமல்ல!