tamilnadu

img

சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒரு செல்பி

முகநூலில் பகிர்ந்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
 

கோவை, ஆக.19 குடிநீர் எங்கள் உரிமை, பன்னாட்டு சூயஸ் நிறுவனமே வெளியேறு என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒரு செல்பி என்கிற நூதன போராட்டத்தை கோவையில் திங்களன்று துவங்கினர்.  கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமையை பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் குடிநீருக்கு அந்நியரிடம் கையேந்துகிற சூழல் உருவாகிவிடும் என்கிற அச்சம் பலரையும் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து கோவையில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூயஸ் நிறுவனம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் கைது செய்வோம் என அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரை கைதும் செய்துள்ளது காவல்துறை. கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து திங்களன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக செல்பி எடுத்து முகநூலில் பதிவிடும் நூதன போராட்டத்தை நடத்தினர். இச்சங்க கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செல்பி எடுக்கும் இயக்கத்தை வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா செல்பி எடுத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக ஏராளமான வாலிபர் சங்கத்தினர் குடிநீர் எங்கள் உரிமை, சூயஸ் நிறுவனமே வெளியேறு என்கிற பேனர் முன்பாக நின்று செல்பி எடுத்து முகநூலில் பதிவிட்டனர்.  இதனைத்தொடர்ந்து மாநிலச் செயலாளர் எஸ்.பாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் செல்பி எடுக்கும் போராட்டத்தை துவக்கியிருக்கிறோம். உலக புகைப்படதினத்தில்  இந்த  செல்பி எடுக்கும் போராட்டம் சூயஸ் நிறுவனமே வெளியேறு என்ற முழக்கத்தின் முன்பு செல்பி எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிடப்படும். இதனைத்தொடர்ந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதேபோன்று செல்பி எடுத்து முகநூலில் பதிவிட உள்ளனர். மேலும், பல புகைப்படங்கள் உலகின் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்த செல்பி எடுக்கும் இயக்கமானது மாநிலம் முழுவதும் பரவும். புகைப்படத்திற்கு வலுவான ஆற்றல் உண்டு என்பதால் இந்த செல்பி எடுக்கும் போராட்டம் நடத்தப்படுகின்றது. மத்திய, மாநில ஆட்சியாளர்களால் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அரசிற்கு எதிராக கருத்து சொன்னாலே கைது செய்வோம் என்கிற அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததற்காக, மெழுகுவர்த்தி ஏற்றியதற்காகவும் ஆட்சியாளர்களின் கைது நடவடிக்கை தொடர்கிறது. பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்தியதற்காக வாலிபர் சங்கத்தினரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், புதிய கல்வி கொள்கை குறித்து பேசினால் மிரட்டல், அச்சுறுத்தல் நடவடிக்கை என ஜனநாயக விரோத அரசாக இந்த ஆட்சியாளர்கள் திகழ்கிறார்கள். மாநில உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து இதுவரை தெளிவான கருத்து தெரிவிக்காமல் இருக்கும் தமிழக முதல்வருக்கு வாலிபர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 

தண்ணீரை விற்பனை பொருளாக மாற்றிவிட்டு பாலத்திற்கு பச்சை வண்ணம் பூசினால் அனைத்தும் பசுமையாகிவிடாது, மக்கள் மனம் குளிராது. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இதனை வலியுறுத்தினால் கைது என்கிற நடவடிக்கையை வாலிபர் சங்கம் ஒருபோதும் ஏற்காது. சூயஸ் நிறுவனத்தை கண்டித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்த கோவையை சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கையால் போராட்ட நடவடிக்கையை முடக்க முடியாது என்பதை அரசுக்கு எச்சரிக்கிற விதத்திலேதான் இந்த செல்பி போராட்டம் நடத்தப்படுகிறது. சூயஸ் நிறுவனத்திற்கு எதிரான எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் போஸ், கோவை மாவட்டத் தலைவர் ஸ்டாலின்குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான வாலிபர் சங்கத்தினர் சூயஸ் நிறுவனத்திற்கு எதிரான செல்பி போராட்டத்தில் பங்கேற்றனர்.

 

;