tamilnadu

img

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்: முதல்வர்

சேலம்,பிப்.9- காவிரி டெல்டா பகுதி பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக தனிச்சட்டம் இயற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ. 48 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவை அமை க்கப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிறன்று(பிப்.9) நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை ஆராய்ச்சி பூங்கா,  கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். விவசாயப் பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கு ஆகியவற்றை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர்பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர், “கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை அளிக்கும் வகையில் கால்நடை தீவன ஆலை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படும்” என்றார். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக  அரசு செயல்படுத்திய திட்டங்கள் உள்ளிட்டவற்றை  பட்டியலிட்ட அவர், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 2016-17 ஆம் ஆண்டில் 2,247 கோடி ரூபாயை தமிழக அரசு அளித்துள்ளது என்றும் “பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். எனவே, இப்பகுதியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். அதற்காக சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து தனிச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்க மணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: பெ.சண்முகம் 

சென்னை,பிப்.9- காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்காது என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது, விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் ஜூலை 23 அன்று டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்திட அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 9 அன்று சேலத்தில் பேசிய தமிழக முதலமைச்சர், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதுடன், அதற்குரிய சட்டமும் நிறைவேற்றப்படும் என்றும், ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும் அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இப்பிரச்சனைக்கு நிரந்தமான தீர்வு காணும் வகையில் உரிய சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. வழக்குகளை வாபஸ் பெறுக ஹைட்ரோகார்பன் திட்டம் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் என்பதை உணர்ந்து அரசே இப்போது அனுமதி அளிக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய பல நூற்றுக்கணக்கானோர் மீது பொய்வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளனர். தங்களின் மண்ணையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து கொள்வதற்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

;