tamilnadu

img

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் உதயம்... 1ம்பக்கத் தொடர்ச்சி

தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார்.

தஞ்சாவூர், ஜூன் 18- காவிரிப்படுகையை பாதுகாப்பு கூட்டியக்கம் தஞ்சாவூரில் செவ்வாயன்று உதயமானது. காவிரிப்படுகையை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்தார்.  கூட்டத்தில், ‘காவிரிப்படுகையை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ், நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை எடுப்ப தற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஓஎன்ஜிசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. நிலவளம், நீர்வளம் அனைத்தும் பாதிக்கப்படும். ஒரு கோடிக்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். காவிரி படுகை மக்கள் வாழ்வதற்கு தகுதி யற்றதாக மாறி விடும் என்ற நிலையில் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளதை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில், ‘காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்’ என்ற பெயரில் செயல்படுவது என்றும் ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி கொள்வது எனவும் கூட்டம் முடிவு செய்தது.  இத்திட்டங்களுக்கு எதிரான மக்களின்  உணர்வு களை வெளிப்படுத்தும்  வகையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,  புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 9ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கக்கூடிய பேரணிகளை நடத்துவது, ஒரு வாரம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

மனிதச் சங்கிலி போராட்டம் 

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை உண்டாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமை யாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 23ம் தேதி மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கூட்டம்  கேட்டுக் கொண்டது. 

கூட்டத்தில் திமுக விவசாய அணிச்செய லாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வே. துரைமாணிக்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு மாநில அமைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் எஸ்.குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில  பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் கே.கே.ஆர்.லெனின், அகில இந்திய விவசாயிகள் மகா சபை ஏ.சந்திர மோகன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செய லாளர் அயனாவரம் முருகேசன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் தங்க. சண்முக சுந்தரம், சமவெளி விவசாயிகள் இயக்கம் சு. பழனிராசன், தமிழக விவசாயிகள் நலச்சங்கம் ஜி. சேதுராமன், சனநாயக விவசாய தொழிலாளர் சங்கம் இரா.அருணாசலம், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் தங்க குமரவேல் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட நிர்வாகிகள், சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.