tamilnadu

img

நிலம் கையகப்படுத்துதல் சட்டம்: மறு சீராய்வு மனு தாக்கல் செய்திடுக! மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சேலம்:
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-யை நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் உச்சநீதிமன்றம் தற்போது கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது, இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செய லாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு,விவசாயிகளின் ஒப்புதலைப் பெறுவது, நிலத்தை கையகப்படுத்துவதால் சமூகத்தில்ஏற்படும் தாக்கம் என பல சாதகமான அம்சங்களை கொண்டதாகவும்,  எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப் பட்டதோ அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் பயன்படுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
தற்போது மார்ச் 6 ஆம் தேதி நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதி மன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஒரு நோக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தி விட்டு எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையிலும் அமைந்துள்ளது. நிலத்திற்கான இழப்பீட்டை முழுமையாக விவசாயிகளிடம் வழங்கிய பிறகே நிலத்தை கையகப்படுத்த வேண்டும்என்பதும் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும், மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்து விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்க முன்வர வேண்டும்.

மரவள்ளி விவசாயத்தைப் பாதுகாப்போம்
மேலும்,  மரவள்ளி விவசாயம் மற்றும் சேகோ தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சீசனுக்கு முன்பு முத்தரப்பு கூட்டங்களை நடத்தி மரவள்ளி விலை நிர்ணயம் செய்து அதை அமலாக்க வேண்டும். சிறு, குறு ஜவ்வரிசி தொழில் நலிவடைந்து உள்ள சூழ்நிலையில் 800க்கும் மேல் இருந்த ஆலைகள் தற்போது பாதியாக குறைந்துள்ளது. எனவே ஜவ்வரிசியை பள்ளிகளில் சத்துணவுடன் முட்டை வழங்குவதுபோல் வழங்க வேண்டும். ரேசன் கடைகளிலும் விற்பனைக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தியையும் மரவள்ளி விவசாயத்தையும் பாதுகாக்கவேண்டும். 

காப்பீட்டுத் தொகை எங்கே?
பிரதமர் வேளாண் காப்பீட்டு திட்டத்தில் கடந்த 2018- 19 ஆம் ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் மற்றும் சிறு தானியங்கள், பயிறுவகை பயிர்கள், மிளகாய் என அனைத்திற்கும் விவசாயிகள் பிரீமியம் செலுத்தி உள்ளார்கள். தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு நெல் மகசூல் உட்பட சிறுதானியங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் மூலம் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 2019 ஜூன், ஜூலையில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ஒருசிலமாவட்டங்களில் நெல் பயிரிட்ட விவசாயி களுக்கு பகுதி அளவில் கொடுத்துவிட்டு பெரும் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் படாமல் காலம் கடத்தப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்களுக்கு அறிவிக்காமலேயே விவ சாயிகள் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள். இதனால் விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்டமுடியாமல் வட்டி பெருகும் நிலை ஏற்பட்டு வருகிறது. காப்பீட்டு நிறுவனம் விவசாயி களின் துயரங்களை கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூர்வாருக!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 103 அடியாக உள்ளது. கடந்த பல ஆண்டு களாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய நீர் இல்லாததால் சாகுபடி நடைபெறவில்லை.  இவ்வாண்டு நீர் இருப்பை கணக்கில் கொண்டால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. போதிய நீர் இருப்பு உள்ள காலங்களில் கூட கடைமடை வரை காவிரி நீர் பாசனம்நடைபெறுவதில்லை. ஏப்ரல், மே மாதங் களில் அனைத்து ஆறுகள் ஏ,டி பிரிவு கால்வாய்கள்
தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தூர்வாரும் பணிகளை கண்காணிக்க விவசாயசங்கங்கள் மற்றும் விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  பழுதடைந்து உள்ள ஷட்டர்களை உடனடியாக சீரமைத்திட வேண்டும்.

மக்காச் சோள விவசாயிகளைப் பாதுகாத்திடுக!
தமிழகத்தில் மக்காச் சோளப் பயிர் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். குறிப்பாக அரியலூர் திருவண்ணாமலை, விருதுநகர், தூத்துக்குடி, கடலூர், பெரம்பலூர், திண்டுக்கல்,திருப்பூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங் களில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு லாபகர மான ஒரு பயிராக மக்காச்சோளம் இருந்து வருகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டது. இந்த ஆண்டு மக்காச் சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்காச்சோளம் குவிண்டால்ஒன்றுக்கு ரூ.1,400 மட்டுமே கிடைக்கின்றது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ.1,900 வரை விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்காச்சோளத்துக்கு குவிண்டால் ஒன்றிற்கு குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரம் வழங்கினால் மட்டுமே கட்டுபடியாகும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில செயலாளர் பி.டில்லிபாபு உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் விதமாக மார்ச் 23ம் தேதி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறவிருந்த தொடர் முழக்கப் போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது எனவும் கொரோனா வைரஸ் பிரச்சனைகளுக்குப் பிறகு தொடர் முழக்க போராட்டத்தை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;