அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு மட்டுமல்லாமல் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன. மேலும், இங்கு 100க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை, சாப்ட்வேர், கால் சென்டர் நிறுவனங்களும் உள்ளன. இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினசரி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்த தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான பிரதான சாலைக ளும், குறுக்கு சாலைகளும் உள்ளன. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் சென்று வருகின்றனர். இச்சாலையை பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள், லாரிகள் வந்து செல்கின்றன. அதேபோல் இங்கு உற்பத்தி செய்த பொருட்களும் வாகனங்கள் மூலம் வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பல சாலைகளை ஆக்கிரமித்து குப்பைகள், கட்டடக் கழிவுப் பொருட்கள் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் அவ்வப்போது காற்றில் பறந்து சாலையின் மையப் பகுதிக்கு வருகின்றன. காற்றில் பறக்கும் குப்பைகள் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. இதனால் அவர்கள் நிலை தடுமாறி சாலையில் வாகனத்துடன் கீழே விழும் சூழ்நிலை உள்ளன. சாலையில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் முறையாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் அதில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. நிறுவனங்களில் இருந்து இயந்திரங்களை துடைத்த ஆயில் துணிகள், கழிவுப் பொருட்களும், ரசாயணக் கழிவுகளும் சாலை ஓரத்தில் குப்பைகளுடன் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைக் கழிவுகளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய் ஏற்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்லும் தொழிலாளர் கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சுகாதார சீர்கேட்டால் அவதிப் பட்டு வருகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு சில இடங்களில் கால்வாயே மூடப்பட்டுள்ளது. இதனால் சிறு மழை பெய்தால் கூட சாலைக ளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் 50 ஆண்டு பழமை வாய்ந்த அம்பத்தூர் தொழிற்பேட்டையின் அவல நிலை மாறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த அவல நிலையை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எத்தனை ஸ்மார் சிட்டி, ஸ்வச் பாரத் திட்டங்களை கொண்டுவந்தாலும் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்க முடியாது.
அம்பத்தூர் எஸ்.ராமு