tamilnadu

img

தொழிலாளர் வேலைக்குச் செல்ல பேருந்து இயக்கப்படுமா?

சென்னை:
தனியார் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவதற்கு, விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் ஆகஸ்ட் 7 அன்று மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கொரோனா ஊரடங்கு 6-வது கட்டமாக நீடிக்கப்பட்ட நிலையில் தொழில் நிறுவனங்கள் இயங்குவது, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்குவது உட்பட பல்வேறு பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  பணியிடங்களுக்கு சொந்த வாகனம் வைத்துள்ள தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு செல்லக்கூடிய நிலைமை உள்ளது.   பொது போக்குவரத்து இல்லாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமைச்செயலக ஊழியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்வதற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சில தனியார் நிறுவனங்கள்  அரசு பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு உள்ளது.  இதற்காக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தனியார் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவதற்கு எவ்வித ஏற்பாட்டையும் அரசு செய்யாததால் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல், வருமானமும் இல்லாமல் அன்றாட தேவைகளுக்குக்கூட பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.கொரோன தொற்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்குவதற்கு அரசு முன் வர வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் விதிக்கப்பட்ட தடையில் திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக செல்வதற்கு மட்டும் நிபந்தனையுடன் மாவட்ட நிர்வாக அனுமதியுடன்  பயணம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்று வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  அரசு நிறுவனங்கள் செயல்பட அனுமதித்தாலும் தொழிலாளர்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இ-பாஸ் முறையை திரும்பப்பெறுக!
தற்போது மத்திய அரசு மாவட்டம், மாநிலங்களிடையிலான பயணத்திற்கு இ-பாஸ் பெறும் முறையை திரும்பப்பெற்றுள்ளது. ஆனால் தமிழக அரசு இ-பாஸ் முறை தொடரும் என்று அறிவித்துள்ளது. நடைமுறையில் இ-பாஸ் பெறுவதில் பல மாவட்டங்களில் முறைகேடுகளும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.கடந்த 4 மாத காலத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை மக்கள் உணர்ந்து முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றி அன்றாட வாழ்க்கை முறைக்கு பழகிவிட்டனர். தற்போதுள்ள சூழ்நிலையில் பொது மக்கள் தேவையின்றி பயணம் மேற்கொள்வதில்லை.  வேலை மற்றும் குடும்ப உறவுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உட்பட தேவை அடிப்படையிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். தமிழக அரசு பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு இ-பாஸ் முறையை திரும்பபெற  வேண்டும்.

ஒரேமாதிரி நிவாரணம் அறிவித்திடுக!
கொரோனா நோய் தொற்று பாதிப்பிலும் அரசு பணிகளை செய்து கொண்டிருக்கக்கூடிய மாநில அரசுக்கு சொந்தமான துறைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களும், தொழிலாளர்களும் கொரோனா பாதிப்பால் மரணமடைய நேரிட்டால் அவர்களுடைய குடும்பத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் காப்பீடு இழப்பீட்டை வழங்க வேண்டும். தமிழக அரசு தற்போது ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் வரை ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு விதமான நிவாரணத்தை அறிவித்திருக்கிறது.  தமிழக அரசின் இந்த பாகுபாடு ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான தொகை அறிவிக்க வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவுக்கு இணைய வழி பதிவை அமலாக்கியுள்ளது. இன்னும் இந்த ஏற்பாடு முழுமைய பெறவில்லை. கடந்த மார்ச் 15லிருந்து இன்று வரை பதிவு முறையாக நடைபெறவில்லை. இதன் காரணமாக மாவட்டங்களில் ஏராளமான பழைய முறையிலான பதிவு விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. அரசு திடீரென இணைய வழி பதிவை அறிவித்ததின் காரணமாக தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழிலாளர் துறை உரிய காலஅவகாசம் அளித்து பழைய விண்ணப்பங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய இணையவழி பதிவில் ஆதார் எண் மற்றும் தொழில் சான்றிதழ் பெற்றபிறகு, அனைத்தும் ஆதார் எண் என்று வந்த பிறகு கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் அலுவலர் சான்றிதழ் தேவையற்றது. இது தொழிலாளர்களை வாரியத்தில் பதிவதற்கு தடையாக மாறியுள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர் சான்று பெறுவதை ரத்து செய்ய வேண்டும்.

நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களில் 60 வயது பூர்த்தியான தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கப்பட்டு வந்தது,  கடந்த10 மாதகாலமாக பென்சன் வழங்கப்படவில்லை. இது வயதான தொழிலாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக பென்சன் பெற தகுதியுடைய அனைத்து நல வாரிய உறுப்பினர்களுக்கும் நிலுவைத்தொகையுடன் காலதமதமின்றி வழங்க வேண்டும்.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் நுற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இத்தகைய வேதிபொருள் எண்ணூர் துறைமுகத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு அசாம்பாவிதம் ஏற்படாதவண்ணம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் நீதிமன்றங்களை திறந்திடுக!
கொரோனா ஊரடங்கினால் நீதிமன்றங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு இணையவழி காட்சி மூலமாக வழக்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால் தொழிலாளர்களது வழக்குகளை விசாரிக்கும் தொழிலாளர் நீதிமன்றங்கள் திறக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலை மற்றும் சம்பளம் உள்ளிட்ட வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொழிலாளர் நீதிமன்றங்கள் திறக்கப்பதற்கு அரசு உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

 

;