tamilnadu

img

சமூக நலக் கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

அம்பத்தூர் அடுத்த ஆவடி நகராட்சிக்குட்பட்ட 39ஆவது வார்டு பட்டாபிராம் பகுதியில்கோபாலபுரம், தென்றல் நகர், குறிஞ்சிமா நகர், முல்லைநகர், சித்தேரிகரை, மாங்குளம், தெற்கு பஜார், கோபாலபுரம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சாதாராண தொழிலாளர்கள். இந்த பகுதி மக்கள் பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை தனியார் திருமண மண்டபத்தில் நடத்தி வந்தனர். இதற்காக ஏழை மக்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஏழை எளிய உழைப்பாளி மக்கள் பொருளாதாரா நெருக்கடியால் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் சமூக நலக் கூடம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நகராட்சியில் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து கடந்த 2002ஆம் ஆண்டு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அப்போதைய நியமன சட்டமன்ற உறுப்பினர் சாண்ட்ராடான் கிரேவால்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துசமூக நலக் கூடம் கட்ட 6 லட்சரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 2004 - 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியில் சமூக நலக் கூடம் கட்டப்பட்டது. ஆனால்  இந்தக் கூடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.  அங்கு நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மீண்டும் சமூக நலக் கூடத்தை விரிவுபடுத்தக் கோரி அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நகராட்சி 12 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்து,சமையலறை, சாப்பாட்டு அறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கூடுதல் அடிப்படை வசதிகளை செய்தன.பின்னர் அந்த பகுதி மக்கள்குறைந்த செலவில் சுப நிகழ்ச்சிகளை சமூகநலக் கூடத்தில் 2007ஆம்ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடத்தி வந்தனர். 2011ஆம் ஆண்டு திடீரென நகராட்சி நிர்வாகம் சமூக நலக் கூடத்தின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இதனால் அதனை ஏலம் எடுத்து நடத்த யாரும் முன்வரவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் சமூக நலக் கூடத்தை இழுத்து மூடி விட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால்கட்டிடம் பாழகி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் பூட்டிக்கிடப்பதால் யாருக்கும் பயனில்லை.இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை திறக்க எந்த நடவடைக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் வீடுகளிலேயே மிகுந்த சிரமங்களுக்கு இடையே சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமூக நலக் கூடத்திற்கு குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.ஆவடி நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தொகுதியில்தான் இந்த நிலை என்பது குறிப்பிடத்தக்கது.- எஸ்.ராமு

;