tamilnadu

குப்பை வண்டியில் வைத்து உணவு வழங்குவது ஏன்? மாநகராட்சிக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி

சென்னை, ஜூலை 30- கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டும் களப்பணியாளர்கள் குப்பை வண்டியில் வைத்து உணவு விநியோகம் செய்வது ஏன்? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம், 14 வார்டில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவை எடுத்துச் செல்ல வாகனம் இல்லாததால், குப்பை வண்டியில் வைத்து விநியோகித்ததாக கூறப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து உணவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு மட்டும் உயர்தர உணவு வழங்கப்படுவதாகவும், கடைநிலை ஊழியர்களுக்கு சுகாதாரமற்ற உணவும் வழங்கப்படுவதாகவும் தினசரி பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. இதனடிப்படையில் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் 3 வாரத்தில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

;