tamilnadu

img

வாழ்வில் அனைத்து நிலையிலும் நம்  தாய்மொழியை பயன்பாட்டு மொழியாக்குவோம்

வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய் மொழியை பயன்பாட்டு மொழியாக்குவோம் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

1952 இல் இதே பிப்ரவரி 21 அன்று,  அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார்  மற்றும் ஷபியூர் (Salam, Barkat, Rafiq, Jabbar and Shafiur ) ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலக தாய்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. 

2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21 "பன்னாட்டுத் தாய்மொழி நாள்" கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத் தாய்மொழி நாள் இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று உண்மை நினைவுப்படுத்துகிறது.  மதத்தை சார்ந்திருக்கும், ஒரு நாட்டின் அரசு, எந்த மதத்தை பின்பற்றுகிறதோ,  அதே மதத்தை பின் பற்றுபவர்களுக்கு அந்த அரசால் எந்த  துன்புறுத்தலும் (they will be not be persecuted) நிகழாது என்று கூறுபவர்களுக்கு வரலாறு தரும் பதில் தான் பிப்ரவரி 21- "உலகத் தாய்மொழி நாள்". 

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடு,  தங்கள் தாய் மொழியில் கல்வி வேண்டும் என்று கேட்டதற்காக இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி நான்கு இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மாணவர்களை கொலை செய்துள்ளது. அதே மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அரசை விமர்சிப்பவர்கள், அரசின் நியாயமற்ற செயலை கண்டித்தவர்கள் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பது தான் வரலாறு.  மதத்தை அடிப்படையாக கொண்டு துன்பம் நிகழுமா? நிகழாதா? என்று கூற இயலாது. நியாயத்திற்காக போராடியவர்கள் வரலாறு நெடுக்க துன்பம் அனுபவித்ததை பார்த்த்துக் கொண்டு இருக்கிறோம்.  இந்த வரலாற்றை உணர்ந்துதான் இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற கோட்பாட்டை முன்வைக்கிறது. அரசு அனைவரையும் சமமாக கருத வேண்டும். மதத்தை வைத்து மக்களை பாகுபடுத்தக் கூடாது. குடியுரிமை வழங்கவும் மறுக்கவும் மதம் ஒரு காரணமாக இருக்கக் கூடாது.  மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள் வரலாறு அற்றவர்களாக போவார்கள்.  தன்மானத்துடன் நாம் வாழ நம் தாய் மொழி காப்போம்.  தாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம்  தாய்மொழியை பயன்பாட்டு மொழியாக்குவோம்.  தமிழ் மொழிக்காக இன்னுயிர் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.