tamilnadu

img

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடி தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? - வைரமுத்து கேள்வி

கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்?

சென்னை, ஜூன் 12- கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பதிவில்,“கீழடி தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரத்தைக் கோரியுள்ளார். ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று கூறியதை எதிர்த்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நடுநிலையான சோதனைச் சாலையில் நடத்தப்பட்டதாகவும், ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருப்பதாகவும், விரைவில் அங்கீகார அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

100 பரிசு ராமதாஸ் அறிவிப்பு திண்டிவனம் ,

ஜூன் 12- திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், “பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தைலாபுரம் தோட்டத்தில் தங்குவதற்கு ஒரு அறை தயார் செய்து கொடுத்திருந்தேன். ஆனால், அவர் எங்கே சென்றார், எங்கு இருக்கிறார் என தெரியவில்லை” என்றார். “கண்டுபிடித்துத் தருவோருக்கு 100 ரூபாய் பரிசு” தருவதாக கூறிய அவர், “நான் விசாரித்ததில் 7 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். வெளிநாட்டுச் சரக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்கள். சகல வசதிகளுடன் அவர், மிதந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது?” என்று கிண்டல் அடித்தார்.

ரேண்டம் எண் வெளியீடு

சென்னை , ஜூன் 12- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களின் தரவாரியான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.  

தலையாட்டி பொம்மை

சேலம், ஜூன் 12 - தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோனபோது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்காமல், சொந்தக் கட்சியையே அடகுவைத்தவர். இப்போதும் தில்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.  

வேளாண் கண்காட்சி நீட்டிப்பு

ஈரோடு, ஜூன் 12 - பெருந்துறையில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சியை, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்றைக்கும் மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது.

இபிஎஸ்க்கு பதிலடி

சென்னை, ஜூன் 12 - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை விமர்சித்திருந்த நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். “நாள் தோறும் பல பெயர்களை சூட்டிய விளம்பர ஆட்சியைத்தான் அதிமுக நடத்தியது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்திலேயே தன் பெயரைப் பதித்த எடப்பாடி பழனிசாமி, விளம்பரம் பற்றியெல்லாம் பேசலாமா?” என்று கேட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்

சென்னை, ஜூன் 12 - சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவர் போல் உடை அணிந்து கொண்டு நோயாளிகளிடம் பழகி நகை, செல்போன்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து செல்வதாக கூறியபோது அவர் பிடிபட்டார். பின்னர் நடந்த விசாரணையில் அந்த நபர், போலி மருத்துவர் என்பது அம்பல மானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.