tamilnadu

img

வலைப் பேச்சு

பா.ம.க. கள்ள ஓட்டுகள் போட்டதை செய்தியாக்கிய திஇந்துவின் செய்தியாளர் பி.வி.ஸ்ரீவித்யா மீது இணைய தாக்குதல்களை தர்மபுரி பாமகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில் முன்னெடுத்திருக்கிறார். ஸ்ரீவித்யா குறித்து அவர் எழுதிய பதிவொன்றை வாசிக்க நேர்ந்தது.ஒரு பத்திரிகையாளராக ஸ்ரீவித்யா என்ன செய்யவேண்டுமோ அதை நேர்மையாக தெளிவாகச் செய்திருக்கிறார். அதற்காக பாமக தன் வழக்கமான பாணியைகையில் எடுக்கிறது. இதற்கெல்லாம் பின்வாங்கக்கூடியவர் அல்ல ஸ்ரீவித்யா. நானறிந்த பத்திரிகையாளர்களுள் நேர்மையானவர் அவர். ஏ.சி.ஜே.வில் படித்துவிட்டு நகரங்களில் பணியாற்றாமல் கிராமப்புறங்களில் பணியாற்ற வந்த நிருபராக அவர் நாகப்பட்டினத்துக்கு வந்தார். நாகை மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடப்பவை கூட அவரால் தி இந்து நாளிதழில் செய்தி ஆனது. அவர் எழுப்பிய கேள்விகளையும், ஆதாரங்களுடன் அவர் எழுதியவற்றையும் மறுக்க முடியாமல், கையும் களவுமாக பிடிபட்ட கும்பல் இப்போது அவரைத் திட்டித்தீர்க்கத் தொடங்கி இருக்கிறது. எனக்கும் இப்படித்தான் தொடங்கினார்கள். பின் அந்தத் தாக்குதல்கள் எதுவரை சென்றதென பலர் அறிவார்கள்.நீங்கள் கள்ள ஓட்டு போடுவீர்கள். அதை ஒரு பத்திரிகையாளர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவேண்டும். சாதிப்பாசத்திலோ அல்லது உங்கள் மிரட்டலுக்கும் அடாவடிக்கும் பயந்துமோ வாயை மூடிக்கொண்டிருப்பவர்களைப் போல் அல்ல ஸ்ரீவித்யா. உங்கள் லட்சணத்தைத்தான் அவர் எழுதுகிறார். பொய்யொன்றும் எழுதவில்லை. நான் உறுதியாக ஸ்ரீவித்யாவின் பக்கம் நிற்கிறேன்.

-கவின்மலர்


*********************************

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும். 

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள் எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல்பார்வை உருவாகும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை, குருவி, கடல், மலை என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப்பிரவகிக்கும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும் அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.

புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!


-உதயசங்கர்

;