சென்னை, மே 21 -தண்ணீர் வராத பகுதிகளுக்கு சிறு லாரிகள் மூலமும்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.வேளச்சேரி தொகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு சில பகுதிகளுக்கு வாரம்ஒருமுறையும், பலபகுதிகளில் 4 நாட்களுக்கு ஒருமுறையும் லாரிகள், தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்குவது பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர்விநியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் வேளச்சேரி தொகுதி முழுவதும் தடையின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி, குடிநீர் வாரிய 13வது மண்டல (பகுதி) அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் வாரிய அதிகாரிகள் சிபிஎம் தலைவர்கள் செவ்வாயன்று (மே 21) பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.இப்பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின்வேளச்சேரி பகுதிச்செயலாளர் கே.வனஜகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரபீக்,ராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன், ஆஷா, துர்க்கைபிரசாத் உள்ளிட்டு சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு வட்டவாரியாக தண்ணீர் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்த மண்டல அதிகாரி புகழேந்தி,லாரிகள் செல்ல முடியாத தெருக்களுக்கு சிறு லாரிகள், குட்டியானை வண்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். நீர்வளம் உள்ள இடங்களில் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்படும். குடிநீர்வழங்கப்படும் நாட்கள்இடைவெளி குறைக்கப்படும். இவைகளை ஒரு வார காலத்தில் செய்து முடிப்பதாக உறுதி அளித்தார்.