“ஒரு ஜனநாயக் குடியரசில் அரசு வன் முறை வெறுக்கத்தக்கது. சீருடை அணிந்த அரசு அதிகார வர்க்கம் ஈடுபடும் குற்றத்திற்கு எதிராக கடும் தண்டனையை உறுதி செய்வதற்கும் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை மட்டுமே இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.’’ தமிழகத்தின் வாச்சாத்தி மக்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்தி சென்னை உயர்நீதி மன்றம் செப்டம்பர் 23, 2023 அன்று வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து உத்தரவுகள் வராமல், அவர்களின் உடந்தை இல்லாமல் இத்தகைய ஒருங்கமைக்கப்பட்ட பெரியளவிலான அடக்கு முறையை சீருடை அணிந்த படையினரால் நடத்திட முடியாது என்பதை அரசியல் அமைப் பின் நீதிமன்றமாக இது அம்பலப்படுத்துகிறது, உறுதிப்படுத்தியும் உள்ளது.
பெரிய மனிதர்களை பாதுகாக்க சாமானியர்கள் மீது தாக்குதல்
உண்மையான கடத்தல்காரர்கள் மற்றும் “பெரிய மனிதர்களை”ப் பாதுகாத்திட வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அப்போதைய அரசின் உதவியுடன் ஆடிய பெரிய மேடை நாடகம் அது. அப்பாவி பழங்குடிப் பெண்கள் பாதிக்கப்பட்டனர். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களால் சாமானியர்கள் மீது பெரிய அளவிலான வன்முறை நடத்தப்பட்டதன் பின்னணியில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் அடக்கு முறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பிற இடங்களில் மாணவர் போராட்டம், உத்தரப்பிரதேசம், ஹரியானாவில் நடக்கும் புல்டோசர் ராஜ்யம், பழங்குடியினருக்கு எதிரான அடக்குமுறை மற்றும் மணிப்பூரில் வன்முறை ஆகியவையும் ஒரு சில உதாரணங்கள். வாச்சாத்தி கிராம மக்கள் வரலாற்றை படைத்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களின் உறுதிக்குச் சான்றாகும். அவர் களின் கண்ணியத்தை இது வலியுறுத்துவதாகும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் (குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தப்பி பிழைத்தவர்கள், அரசு மற்றும் சட்ட அமலாக்கப் பணியாளர்கள் பெருமள விலான குற்றங்களில் தண்டனை பெற்றுள்ள சட்ட வரலாற்றின் அரிதான வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு திட்டமிட்டு நடத்திய வன்முறை
தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களின் தொலைதூர கிராமமான வாச்சாத்தியில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுபடுத்துவது அவசியம். ஜூன் 20.1992 அன்று சந்தன மரக்கடத்தலில் அந்த கிராம மக்கள் ஈடுபட்டதாகக் கூறி சுமார் 300 சீருடை அணிந்த அதிகாரிகள் வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டனர். கர்ப்பிணிப் பெண் உட்பட 18 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். மேலும் வனக்காப்பாளர் அலுவலகத்தில் குழந்தைகள் உட்பட சட்டவிரோதமாக அடைக்கப்பட்டனர். ஊர்க் கவுண்டர் (ஊர்த் தலைவர்) அந்தப் பெண்களின் உடைகளை களையுமாறு ‘சட்டத்தின் பாதுகாவலர்கள்’ உத்தரவிட்டனர். அவரை துடைப்பத்தால் அடிக்கும்படி பெண்களை வற்புறுத்தினர். பல கிராம மக்கள் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதிகாரிகள் கொள்ளை மற்றும் வன்முறையைத் தொடர்ந்தனர். கிராம மக்கள் காடுகளை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜூலை 1992-இல் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலையீட்டிற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளரான ஏ.நல்லசிவன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினார். வனத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்தப் புகார் பொய்யானது. புனையப்பட்டது எனக் கூறினார். இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர், காவல் கண்காணிப்பாளர், தலைமை வனப்பாதுகாவ லர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மையை உரைத்த பாமதியின் அறிக்கை
தேசிய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி யினர் ஆணையத்தின் (தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்) இயக்குநராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான திருமதி, பாமதி அவர்கள் மட்டுமே தன்னுடைய அறிக்கையில் (உண்மை நிலவரங்களை) எஸ்சி.எஸ்.டி தேசிய ஆணையத்திற்கு அனுப்பினார். அப்போதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. ஏ.நல்லசிவன் தொடுத்த ஒரு பொதுநல வழக்கை மாநிலத்தின் உச்சபட்ச சட்ட அதிகாரி யான அட்வகேட் ஜெனரல் கடுமையாக எதிர்த்தார். 1995ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம், திருமதி. பாமதியின் அறிக்கையை ஏற்று அரசை கடிந்துரைத்தது. வழக்கு தொடர்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவிட்டது. மத்திய புலனாய்வுத்துறையையும் வழக்கை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டது. நீதியின் துவக்கத்திற்கான காத்திருப்பு மிக நீண்டதாக இருக்கிறது. ஏன் அப்படி? பாதிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினருக்கு கட்டாய இடைக்கால நிவாரணம் வழங்கக்கூட மறுத்த அரசின் மெத்தனம், அப்பாவி கிராம மக்கள் மீது காவல்துறையினர் தொடுத்த பொய் வழக்கு கள், அரசின் மறைமுக ஆதரவுடன் விசாரணை யைத் தடுத்து நிறுத்தக் கோரி குற்றம் சாட்டப்பட்ட வர்களின் பல மனுக்கள். பல மடங்கு தடைகள்.
கூட்டுப் பொறுப்பை ஏற்க மறுத்த அரசு
எவ்வாறாயினும் தாமதத்திற்கான முக்கியக் காரணம் நீதிமன்றத்தின் அவதானிப்புகளில் தெளிவாக உள்ளது. குற்றத்தை இழைத்தவர் ஒரு தனி மனிதர் அல்ல, பாதிக்கப்பட்டு புகார் அளித்த வரும் தனி மனிதரல்ல மற்றும் பாதிக்கப்பட்டவர் களின் சான்றுகள் அவர்கள் அச்சுறுத்தப்பட்டதை தெளிவாகக் காட்டுகின்றன. சீருடை அணிந்த அரசு அதிகாரிகளின் படையால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை வெளிப்படுத்தினால் அவர்கள் உயிர் பறிபோகும். அவர் தம் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறே அச்சுறுத்தப்பட்டனர். இது அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுக் குற்றம்; ஆனால், மற்ற தனிப்பட்ட குற்றங்களைப் போல் ஏன் கையாளப்பட்டது? இது ஒரு பெரிய குறை அல்லவா? அரசின் பிரதிநிதிகளால் குற்றங்கள் நடக்கும் போது சம்பந்தப்பட்ட துறை யின் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் சிறிது கூட பொறுப்பு இல்லையா? அவர்கள் மீதும் குற்றம் சுமத்திட வேண்டாமா? சாட்சியம், பொறுப்பு, ஆதாரம் மற்றும் குற்றத்தின் அளவு, பின்னர் மாறும் குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள மோசமான குறைபாடுகள் காரணமாக விசாரணை நீண்டது. நீதி தாமதமானது. நம்மு டைய குற்றவியல் சட்டங்கள், சிறப்பு நடைமுறை கள், சாட்சியக் கொள்கைகள், மாநில அதிகாரி களால் திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களுக்கு குற்றவியல் பொறுப்பை வழங்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் குற்றத்தையும் தனிநபர் குற்றம் செய்தது போல அரசு தரப்பு நிரூபிக்க வேண்டும்.
ஐநா அடிப்படைக் கோட்பாடும் ரோம் சட்ட உரிமைப் பிரகடனமும்
சட்ட அமலாக்க முகமையின் உயர்அதி காரிகள், தங்களின் கட்டுப்பாட்டுக் கீழ் இயங்கும் அதிகாரிகள் மனித உரிமைகளை மீறுகிறார்கள் அல்லது அதற்கு துணை போகிறார்கள் என்று தெரிந்தால் அல்லது அதனை தடுத்திட எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தால், அதனை தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் மீது படை மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்து வதற்கான ஐ.நா. அடிப்படை கோட்பாடுகளின் கொள்கை 24-க்கு இணங்க அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் ஆபத்து பற்றிய அறிவு, உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதை அறிந்து கொள்ள வேண்டிய கடமை, ஆபத்தைத் தடுக்கும் அல்லது தவிர்ப்பதற்கான நியாயமான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை மேலதிகாரிகளின் பொறுப்பை சரி செய்வதற்கான காரணிகள் என தென்அமெரிக்காவில் இயங்கும் மாகாணங் களுக்கிடையிலான மனித உரிமைகள் நீதி மன்றம் பல தீர்ப்புகளில் எடுத்துரைத்துள்ளது. எனவே, மேலதிகாரிகள் போதிய கண்காணி ப்பை, கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்ப தற்காக உண்மை நிகழ்வை அறியாதவர்கள் என கூற முடியாது. ரோம் சட்ட உரிமைப் பிரகட னத்தின் 28ஆவது பிரிவும் அரசு பொறுப்பை நிறைவேற்றத் தவறுவது குறித்தும் எச்சரித்துள்ளது.
வெறுக்கத்தக்க காலனித்துவ மரபு
இந்தியாவில் வகுப்புவாத மற்றும் திட்டமிடப் பட்ட வன்முறை தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடு களுக்கான அணுகல்) மசோதா காலாவதி யானது. காலனித்துவ பழைய சட்டங்களை நீக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு அறி முகப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்ட மசோ தாக்கள் அரசு அதிகாரிகளால் ஒழுங்கமைக்கப் பட்டு நடத்தப்படும் வன்முறையை குற்றத்தின் தனிப்பிரிவாக அங்கீகரிக்கவில்லை. அதற்கு விரைவான தீர்வையும் வழங்கவில்லை.அரசு முன்னின்று நடத்தும் வன்முறை காலனித்துவ மரபாகும். ஜனநாயகக் குடியரசில் அது வெறுக்கத்தக்கது. தீர்ப்பின் முக்கிய அம்சம் பட்டியல் - பழங்குடியின மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சட்டத்துறை கருதுகிறது. அரசின் கூட்டுப் பொறுப்பு என்பது தான் வாச்சாத்தி வழக்கில் முக்கிய அம்சம். எனவே, உயர்நீதி மன்றம் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி 10 லட்சம் ரூபாய் தொகை வழங்குவதற்கும், பலாத்காரத்தில் உயிர் பிழைத்த ஒவ்வொரு வருக்கும் வேலையை உறுதி செய்வதற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும் என புத்திசாலித்தன மாக உறுதி செய்துள்ளது. அப்போதைய மாவட்ட ஆட்சியர். காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. குற்றம் இழைத்தத ற்காகவும், அந்தப் பொறுப்பை ஏற்று சரி செய்வதற்காக நாம் ஒரு அரசை நிர்பந்தப்படுத்த முடியாதா? அதற்கான பொறுப்பை ஏற்கச் செய்ய முடியாதா?
உண்மையான ஹீரோக்கள்
வாச்சாத்தி, தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய நிர்பயா (2012)-க்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொடூரம். 2013ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டத்திருத்தங்களான பலாத்காரத்திலிருந்து தப்பியவர்களின் அடையாளத்தை பாதுகாத்தல், பாலியல் உணர்திறன் விசாரணை, மருத்துவ - சட்ட மற்றும் உளவியல் ஆதரவின் வசதி, பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் ஆகியவை இந்த வழக்கின் நடைமுறையில் கிடைக்கவில்லை. பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பியவர்களுக்கு (18 பேர்) அவர்களின் அடையாளங்களை முழுமையாக பகிரங்கமாக வெளிப்படுத்துவது, விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அல்ல, பலரின் சார்பாக கடுமையான குறுக்கு விசாரணைகள் ஆகியவற்றையும் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் அவர்களின் வேதனையும் அதிகமானது. ஒரு பழமைவாத, அச்சுறுத்தல் நிறைந்த குற்றவியல் நீதி அமைப்பையும் மக்கள் விரோத அரசையும் அவர்கள் எதிர் கொண்டனர். அவைகளை வென்றனர். பலர் தற்போது கல்வி கற்று அப்பகுதியில் பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்கிறார்கள். இந்த பெண்கள் தான் வாச்சாத்தியின் உண்மையான ஹீரோக்கள்.
நன்றி : தி இந்து - 04.10.2023
தமிழில்: கடலூர் சுகுமாரன்