tamilnadu

img

குடிநீர் தேடி அலையும் விழுப்புரம் மாவட்ட மக்கள்...

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் விழுப்புரம் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றனர். மேலும் பருவமழையும் பொய்த்துப் போனதால் பயிர் செய்யும் நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்து கிடக்கின்றன.30 லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட விழுப்புரம் மாவட்டத் தில் பிரதான தொழிலாக விவசாயம் தான் உள்ளது. கரும்பும், நெல்லும் முக்கிய பயிர்களாக விளங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் பத்து விழுக்காட்டை நிறைவு செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் இந்த ஆண்டு கடுமையான வறட்சியின் காரணமாக உணவு உற்பத்தியும் குறையும் அபாய நிலையை எட்டியுள்ளது. மாவட்டத்திலுள்ள கோமுகி, மணிமுத்தாறு, வீடூர் உள்ளிட்ட அணைகள் தற்போதைய நிலையில் காய்ந்து கிடக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் இந்த மாவட்டத்தின் சாதாரணமான மழை அளவு 1060 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் 2018 ஆம் ஆண்டு 760 மில்லி மீட்டர் அளவிற்குத்தான் மழை பெய்தது. இதனால் குடிநீருக்கே அல்லாடும் நிலையில் மாவட்ட மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தமிழக ஆட்சியாளர்களால் கடந்த பல ஆண்டுகளாக ஆறுகளில் மணல் சூறையாடப்பட்டு வருகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதன் காரணமாகவும் விவசாயம் உள்ளிட்ட தினசரி பயன்பாட்டிற்கான தண்ணீரின் தேவைக்கு அனைவருமே அல்லாட வேண்டியுள்ளது.மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, கண்டாச்சிபுரம், சின்னசேலம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருக்காகவும், விவசாய பயன்பாட்டிற்கும் போர்வெல் போடுவது என்றால் கூட குறைந்தபட்சம் 400 அடிக்கு கீழ்தான் போகிறது.

கிட்டத்தட்ட 1000 அடி கூட தோன்டக்கூடிய இடங்களும் உள்ளன. கள்ளக்குறிச்சி நகராட்சியில் வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. சங்கராபுரத்தில் 15ந்திலிருந்து 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் என்பது நடைபெறுகிறது. உளுந்தூர்பேட்டையில் 700 அடி முதல் 1200 அடிவரை குடிநீருக்காக தோண்ட வேண்டியுள்ளது. மேலும் வரக்கூடிய பேரூராட்சி குடிநீரும் சுண்ணாம்பு கலந்து வருவதால் சிறுநீரக கோளாறு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இப்படி மாவட்டமே தண்ணீர் பிரச்சனையில் சிக்கியுள்ள சூழ்நிலையில் கடந்த ஆண்டு அரசின் கணக்கின்படி “சராசரியை தாண்டி மழை பெய்துள்ளதால்” விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டங்கள் பட்டியலில் தமிழக அரசு சேர்க்கவில்லை. இது இம்மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் மேலும் வேதனைக்குள்ளாக் கியுள்ளது.மாவட்டம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் குடிநீருக்காக அவ்வப்போது பொதுமக்களும், பெண்களும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறையை கொண்டு மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது அடக்கி வருகிறது. ஆனால் குடிநீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. கடந்த பதினைந்து தினங்களாக இப்படிப்பட்ட பொதுமக்களின் போராட்டங்கள் கூடுதலாகிக் கொண்டே வருகின்றன. செவ்வாயன்றும் திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வீரபாண்டி கிராம பொதுமக்கள் திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டங்களின் விளைவாக செவ்வாயன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் குடிநீர் திட்டப் பணிகளுக்காக சுமார் 70 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை தொடங்க உத்தரவிட் டுள்ளதாக அறிவித்துள்ளார். இதில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் தடையின்றி குடிநீர் வழங்கும் பணிக்கு சுமார் 70 கோடி ரூபாய் அளவில் 2911 இடங்களில் குடிநீர் திட்டப் பணிகளை தொடங்க நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.குடிநீர் பிரச்சனையை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18004253566 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் களின் வாயிலாக பொதுமக்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனால் இது மட்டும் போதாது. மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனைகளை அனைத்து கிராமங்களிலும் தீர்த்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளன.

-வி.சாமிநாதன்

;