tamilnadu

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி திமுக எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை, ஆக.18- பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிரிவினர் இட ஒதுக்கீட்டை மத்திய குடிமைப் பணிகள்  தேர்வாணையம் (யுபிஎஸ்சி) புறக்கணிக்கிறது என்று திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை  பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யுபிஎஸ்சி எப்படி புறக்கணித்துள் ளது என்பதற்கு யுபிஎஸ்சி  வெளியிட்டுள்ள விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குநர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பு களை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு  ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும் போது, மொத்தமுள்ள 45 இணைச்  செயலாளர் மற்றும் இயக்குநர், துணை செய லாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?

பிரதமர், நீங்கள் இந்த சட்டவிரோதமான, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல் முறையை தொடரப் போகிறீர்களா அல்லது  அரசியல் சட்ட இடஒதுக்கீடு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.