தோழர் என்.சங்கரய்யா மறைவையொட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு வெள்ளியன்று (நவ.17) ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தோழர் சங்கரய்யாவின் மகன்கள் எஸ்.சந்திரசேகர், எஸ்.நரசிம்மன், மகள் சித்ரா உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா, இறுதி மூச்சுவரை கம்யூனிச கொள்கையில் தன்னை முழுமை யாக உட்படுத்திக் கொண்டார். அனைத்து தரப்பு மக்களும் மதிக்கக் கூடிய பழம் பெருந் தலைவரான அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியி னருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.சங்கரய்யாவின் சமூக பங்களிப்பு அளப்பரியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தார். தனது வாழ்வை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்தார்” என்றார்.