tamilnadu

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிபெறாது:ஏ.பாக்கியம்

சென்னை, ஏப். 8 -எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு சிபிஎம் வேளச்சேரி தொகுதிக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஏப்.6)தரமணியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கலவர முயற்சி


இக்கூட்டத்தில் பேசிய சிபிஎம்தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், “மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், திரைக்கலைஞர்கள், அறிவிஜீவிகள், எழுத்தாளர்கள், பொருளாதார அறிஞர்கள்,கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து களத்தில் இறங்கியுள்ளார்கள். அரசியலில் மோடியை வளர்த்தெடுத்தவர் அத்வானி.மோடியின் செயல்பாடுகளைஅவராலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தற்போது அவரும் மோடிக்கு எதிராக திரும்பியுள்ளார் என்றார்.தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க அதிமுக அணி திட்டமிட்டுஉள்ளது. அதன் தொடக்கமாக கி.வீரமணி மீதான தாக்குதலை தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சியினர் வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்திபலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. பெரியாரின் சிலையை உடைப்பேன், செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன எச்.ராஜாவுக்கு, முதலமைச்சர் ஓட்டு கேட்கிறார். எனவே, பாசிச பாஜக-வையும், அதனோடு சேர்ந்து வரும் அதிமுக-வையும் வீழ்த்துவோம் என்றும் அவர் கூறினார்.


பெய்டு நியூஸ்


திமுக மாவட்டச் செயலாளர்மா.சுப்பிரமணியன் குறிப்பிடுகையில், “அதிமுக வேட்பாளர்ஜெயவர்த்தன் செய்யாததையெல்லாம் செய்ததாகக் கூறி ‘பெய்டுநியூஸ்’ முறையில் விளம்பரம் செய்துவருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.இக்கூட்டத்திற்கு சிபிஎம் தொகுதிச் செயலாளர் கே. வனஜகுமாரி தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் எஸ். ஏழுமலை (சிபிஐ), கழககுமார் (மதிமுக), காங்கிரஸ் கட்சித் தலைவர் கராத்தே தியாகராஜன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.அனிபா, பகுதிச் செயலாளர்கள் அரிமா சு. சேகர் (திமுக), செல்லபாண்டியன் (மதிமுக), எஸ்.கோவிந்தன் (சிபிஐ), காங்கிரஸ் சர்கிள் தலைவர் ஆர்.கோபிதாஸ், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரஃபிக், கே.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.


;