மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜக பரிவாரம் பகைமை விதைகளை தூவியும், குறுகிய தேசிய இனவெறியை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது. கடந்த தேர்தலில்‘வளர்ச்சியின் நாயகன்’ என்று மோடியை முன்னிறுத்தினார்கள். அந்த ‘வளர்ச்சியின் நாயகன்’ பிரதமராக இருந்து இந்திய மக்களுக்கு கொண்டுவந்து சேர்த்த வளர்ச்சி இதுதான் என்று அவர்களால் எதுவும் கூற முடியவில்லை. எனவே இந்திய ராணுவத்தினரின் வீர தீரத்தை களவாடி தங்களுடைய கட்சியின் சாதனைகள் போல பேசும் இவர்கள், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றனர்.பிரதமர் மோடியே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை முன்னிறுத்த முயல்கிறார். திரைப்பட நடிகர் அக் ஷய் குமாருக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய குழந்தைப் பருவத்தை பற்றி பேசியிருக்கிறாரே அன்றி ஒரு பிரதமராக அவருடைய செயல்பாடு குறித்து எதுவும் கூறவில்லை. மறுபுறத்தில் பாஜக தலைவர் அமித்ஷாகம்யூனிஸ்ட்டுகளை துக்கடா என்று குறிப்பிட்டுள்ளார். பீகார் மாநிலம் பெகுசராயில் பேசியஅவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், ஜேஎன்யூ மாணவர் தலைவருமான கன்னையாகுமாரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியுள்ளார். ஜேஎன்யூவில் தேச விரோத முழக்கங்களை எழுப்பியவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறியதோடு இவர்கள் துக்கடாக்கள் என்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் போராட்ட காலம் தொடங்கி தேச பக்தியோடு நாட்டு நலன்காக்க போராடி வரும் கம்யூனிஸ்ட்டுகளை பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் இல்லை. அன்றைக்குபிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பாதந்தாங்கிகளாக இருந்த இவர்கள் இன்றைக்கு கார்ப்பரேட்முதலாளிகளுக்கு காவலாளி வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் கோடானுகோடி உழைக்கும் மக்களின் மனசாட்சியாக இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்டுகள் களப்பணியாற்றி வருகிறார்கள். துடுக்குத்தனமாகவும், போக்கிரித்தனமாகவும் பேசுவதன் மூலம் பிரதான பிரச்சனைகளிலிருந்து மக்களினுடைய கவனத்தை திசை திருப்ப பாஜக முயல்வது எடுபடாது. வேலையில்லாத இளைஞர்களை பக்கோடா விற்க செல்லுமாறு கூறிய இந்தக் கூட்டத்தை வாக்குரிமை மூலம் பழி தீர்க்க இளைஞர்கள் தயாராகவுள்ளனர்.இமாச்சலப் பிரதேச பாஜக தலைவரான சத்பால்சிங் சத்தி என்பவர் பிரதமர் மோடிக்கெதிராக யாராவது விரலை உயர்த்திப் பேசினால்கைகளை துண்டிப்போம் என்று வெறித்தனமாக பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசியதற்காக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட 48 மணி நேர தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு வாயைத் திறந்த இவர் இவ்வாறு ரத்தம் கக்கி பேசியுள்ளார்.இந்த தேர்தல் களத்தையே வன்முறைக் களமாக மாற்ற பாஜக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. பிரதமர் மோடியும்,பாஜக தலைவர் அமித்ஷாவும் இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். மக்கள் தங்கள் ஜனநாயக உரிமை மூலம் இவர்களை தண்டிப்பார்கள் என்பது உறுதி.