tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது


சென்னை, ஏப்.25-செல்போன் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை கொடுங்கையூர் பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் செல்போன் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில் வியாழனன்று (ஏப்.25) கொடுங்கையூர் எத்திராஜ் சாலை பகுதியில், கல்லூரி மாணவர் சூர்யாவிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். பிறகு சூரியா அவர்களை துரத்தினார். 3 பேரில் ஒருவரை பிடித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், ராயபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (21) என்பதும் தெரியவந்தது. இவரும், கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து பல இடங்களில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நிரோசன் (23), ராயபுரத்தைச் சேர்ந்த முகமது இர்பான் (21) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் இவர்கள் மீது நீலாங்கரை ஏழுகிணறு பாண்டிபஜார் காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து கைது செய்த 3 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 


2,865 வீடு, கடைகளை இடிக்க முடிவு


சென்னை, ஏப்.25-சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது முதல் கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமானநிலையம் வரை உயர்மட்டப் பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கியது.2-வது கட்டமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 118.9 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுகிறது. இதற்காக தனியார் மற்றும் அரசு நிலங்கள் 300 ஏக்கர் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தட பாதைக்காக சாலையோரம் உள்ள 2,865 வீடு, கடைகள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு, இழப்பீடு தொகைக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. 2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்கான மொத்த திட்டச்செலவில் இது 15 சதவீதம் ஆகும்.மெட்ரோ ரயிலுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு தி.நகர், மேற்கு மாம்பழம், புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளை சேர்ந்த வீடு, கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.மெட்ரோ ரயில் நிறுவன கணக்கெடுப்புபடி 2,865 குடும்பங்களில் 9.455 பேர் மெட்ரோ ரயில் திட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 165 குடும்பத்தினர் தங்களது வீடுகளை முழுமையாக இழந்துள்ளனர்.777 குடும்பத்தினர் கடைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சிறுசேரி, சிப்காட் பகுதிகளில் 97 குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர். 279 பேர் கடைகள் மற்றும் வணிகக் பகுதிகளை இழந்துள்ளனர்.நிலம் கையகப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நிலம் உரிமையாளர்கள் 2,970 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீட்டு தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது. 


;