tamilnadu

img

ரபேல் ஊழலை ஊரறிய செய்தது தேர்தல் ஆணையம்

திருவண்ணாமலை, ஏப். 15-திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து கலசபாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது:-கொள்கையில் எதிர், எதிர் துருவங்களாக இருந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சி கூட்டணிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி வைப்பது குறித்து பேசி வந்தது பாமக மற்றும் தேமுதிக கட்சிகள். அதிக சீட்டும், நோட்டும் கிடைத்ததால் தான் அவைகள் தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளன. பாஜக கடந்த தேர்தலில், அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் காற்றில் போனது. ஒட்டு மொத்த இந்தியர்களும், தமிழர்களும் பாதிக்கப்பட்டுள் ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களிலும் உருவாக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தை முடக்குவதே, மோடி அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.


முன் அனுபவமில்லாத அனில் அம்பானி நிறுவனத்துடன் ராணுவ விமானம் வாங்குவதற்கான ஒப்பந் தத்தில், ரபேல் பேர ஊழல் நடந்துள் ளது. விமான நிலைய பராமரிப்பும் அனில் அம்பானி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரபேல் பேர ஊழல் குறித்து, பாரதிபுத்தகாலயம் சார்பில், ஒரு நூல் வெளியிட திட்டமிடப்பட்டது. நூல் வெளியீட்டு தினத்தன்று அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், அங்கிருந்த மொத்த புத்தகத்தையும் அள்ளிச் சென்றனர். இதை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அந்த புத்தகத்தை தாங்கள் படிக்க வேண்டும் என்று, மீண்டும் அச்சிட்டு வாங்கிச் சென்றுள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கான புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. எனவே, பரவலான மக்களுக்கு இந்த புத்தகம் சென்று சேர காரணமாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.எட்டு வயது குழந்தை முதல் 80 வயது முதியோர் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி, துடியலூர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள், உள்ளூர் காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. 7 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், ஆளும் கட்சிக்கு கமிஷன் வராமல் செய்திருக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நம்புகின்றனர்.


தமிழகத்தில் சத்துணவு, முட்டை, கிரானைட், உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது, தமிழகத்தில் மக்கள் உரிமை பறிபோகிறது. எதிர்த்து போராடினால், தொழிலாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவையும், இந்தியாவில் பாஜகவையும் அகற்றுவதே மக்களின் முதல் கடமையாகும்.இவ்வாறு வாசுகி பேசினார். தாலுகா செயலாளர் கே.கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வன், கே.வாசுகி, ஆர்.பாரி, பெ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;