tamilnadu

img

யூடியூபர் மாரிதாஸுக்கு, 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு

குன்னுர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யூ டியூபர் மாரிதாஸ் டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் காவல்துறையினர்  மாரிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
இதைத்தொடர்ந்து பொய்த் தகவல்களைப் பரப்பியதாகத் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி  ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தேசத்துரோகம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கை நான்கே நாட்களில் விசாரித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அடியோடு ரத்து செய்து தீர்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் மாரிதாஸ் மீது வழக்குப் பதிந்ததே சட்ட விரோதம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் கொரோனா முதல் அலை பரவியபோது தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொள்ள பல இஸ்லாமியர்கள் சென்றிருந்தனர். அந்த மாநாட்டிற்கு சென்று வந்த இஸ்லாமியர்களால்தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என்றும், முஸ்லீம் + தீவிரவாதம் = தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் கடந்த ஆண்டு மாரிதாஸ் தனது யூடியூப்பில் பதிவிட்டிருந்தார். இந்தியாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என்று அவதூறாகவும், முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும், சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் கடந்த 2020 வருடம் ஏப்ரல் 2ம்  தேதி மாரிதாஸ் யூடியூப் சேனலில் பேசினார். இதுகுறித்து 2020 ஏப்ரல் 4-ஆம் தேதி நெல்லை மேலப்பாளையம் பகுதி தமுமுக சார்பில் தமுமுக நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் அறிவுறுத்தலின்பேரில் மாரிதாஸ் மீது தமுமுக உறுப்பினர் முகம்மது காதர் மீரான் நெல்லை மேலப்பாளையம் காவல்  நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட சிறையில் இருந்த மாரிதாஸை நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்,  இன்று காலை தேனி சிறையில் கைது செய்யப்பட்டு நெல்லைக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டார் , நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 5-இல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயலெட்சுமி வரும் 30.12.21 வரை மாரிதாஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாரிதாஸ் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

;