tamilnadu

img

இந்திய கலாச்சாரத்தை ஆராயும் குழுவில் தமிழர் இடம்பெற வேண்டும்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை:
இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட  நிபுணர் குழுவை மறுசீரமைப்பு செய்து, அக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 16 பேர்கொண்ட நிபுணர்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதை வரவேற்கிறோம்.ஆனால், இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில்,மிகப் பழமையான திராவிடர் கலாச்சாரத்தைச் சேர்ந்த அல்லது தென்னிந்தியா்கள் குறிப்பாக தமிழர்கள் யாரும் இந்த  நிபுணர்குழு வில் இடம் பெறாதது   துரதிருஷ்டவச மானதாகும்.சமீபத்தில் தமிழகத்தின் கீழடிஉள்ளிட்ட பகுதிகளில்  நடத்தப்பட்ட தொல்லியல் துறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நீங்கள் மாமல்ல புரம் வந்து, தமிழக பாரம்பரியத்தை நேரில் கண்டு வியந்தீர்கள். அப்போது, இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் தமிழக கலாசாரம் மற்றும் மொழிக்கு இடமளிக்காமல் முழுமையடையாது என்று  என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள்.ஆனால், தற்போது, இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர்கள் யாரும் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்திய கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவை மறுசீரமைப்புசெய்து, அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;