tamilnadu

img

ரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கு வேலை மறுப்பு பிற மாநிலத்தவருக்கே முன்னுரிமை அளிப்பு... வாலிபர் சங்கம் கடும் கண்டனம்

சென்னை:
ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்பு களில்  பிற மாநிலத்தவருக்கு முன்னுரிமை  அளிக்கப்பட்டு, தமிழக இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வருவதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு தென்னக ரயில்வேயில் குரூப்-2பிரிவு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பரில் பணி நியமன ஆணை பெற்ற 1,700-க்கும் அதிகமானோரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்கள் 528 பேர். இதில், 450-க்கும் அதிகமானோர்வட மாநிலத்தவர். அப்போதே ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டித்ததோடு இதைதிரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தின. மேலும், தென்னக ரயில்வேயில் தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை வழங்கும் வகையில் பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தின. ஆனாலும், தமிழக இளைஞர்களை வஞ்சித்த இந்த பணி நியமனத்தை ரத்து செய்ய தென்னக ரயில்வே தயாராக இல்லை. 

வடமாநிலத்தவருக்கு இ-பாஸ் கொடுத்தது எப்படி?
இந்நிலையில், பணிநியமனம் பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்றது. இதில், வட மாநிலத்தவர்கள் 300-க்கும் அதிகமானோர் பங்கெடுத்துள்ளனர். ஊரடங்கு அமலில்இருக்கும் இந்த நேரத்தில் ரயில்கள், பேருந்துகள் இயங்காத நிலையில் திருச்சி பொன்மலைக்குள் இத்தனை வடமாநிலத்தவர்கள் எப்படிவந்தார்கள். இவர்களுக்கு எதனடிப்படையில் இ-பாஸ் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளோடு பொன்மலை ரயில்வே முன்னாள் ஊழியர்களின் வாரிசுகளும், கடந்த பல ஆண்டுகளாக பணிமனையில் அப்ரண்டிஸ் முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்போரும் ஆர்மரிகேட் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் திருமண கூடத்திற்கு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து அரசை வலியுறுத்திவருகிறது. ஆனால், தென்னக ரயில்வே தமிழகமக்களின் உணர்வுகளுக்கோ, உரிமைகளுக்கோ மதிப்பளிக்காமல் கொரோனா பேரிடர் காலத்திலும் அவசர அவசரமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்கிறது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இந்த பணிநியமனத்தை மத்தியஅரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடுக!
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அண்டை மாவட்டங்களுக்குச் செல்லஇ-பாஸ் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வட மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் எப்படி வந்தார்கள் என்பதை தமிழக அரசு விளக்கிட வேண்டும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, தென்னக ரயில்வேயில் படிப்படியாக வட மாநிலத்தவர்களை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணைபோகிறதா என்பதையும் தமிழக அரசு தெளிவுபடுத்திட வேண்டும்.  மேலும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதத்தில்  தமிழக அரசு நடவடிக்கைஎடுத்திட வேண்டும்.  மேற்கண்ட தென்னக ரயில்வேயின் திருச்சி பொன்மலை பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வை திரும்பப் பெற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;