தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து சிபிஎம் வாழ்த்து
செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியனாக சாதனை படைத்துள்ள குகேஷுக்கு வாழ்த்துக்கள். உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கியதன் மூலம் உலக செஸ் தலைநகராக சென்னை இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. குகேஷின் வெற்றியினால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது” என கூறியுள்ளார். இதே போல தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர் குகேஷுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டின் சதுரங்க வீரர் குகேஷுக்கு அன்பு வாழ்த்துகள். சீனாவின் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இந்திய வீரராக பெருமை சேர்த்தாய், வாழ்த்துகிறோம்” என கூறியுள்ளார்.