சென்னை, மார்ச் 12 - ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் கட்சி நிர்வாகிகளுடன் செவ்வாயன்று (மார்ச் 12) சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்களை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வசீகரன்,“ மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும்” என்றார்.
அதேபோல், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பொதுச்செயலாளர் எஸ். கர்ணன் மற்றும் தேசிய செயலாளர்கள் எஸ். சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது, தங்கள் கட்சி அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்வோம்” என்றனர்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த பி.வி. கதிரவன் சில தினங்களுக்கு முன்பு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளனர்.