சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம், பட்டியல் சாதி துணைத் திட்ட அமலாக்கத்திற்கு சிறப்புச் சட்டம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.19) சென்னையில் தலித் உரிமை உச்சி மாநாடு நடைபெற்றது.
இடதுசாரி, ஜனநாயக, தலித், சமூக நீதி, விவசாயத் தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டை நடத்தின. 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அர சியல் நிகழ்ச்சி நிரலில், 35 கோடி பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அம்சங்களை கொண்டு வருவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது.
முழு இயந்திரமாக்கல் கொண்டு வருக!
மனிதக் கழிவை உடலால் அகற்றும் இழிவுக்கு முடிவு கட்ட முழு இயந்திரமய மாக்கல் மற்றும் முழுமையான மறுவாழ்வு திட்டம் வகுக்க வேண்டும், தனியார் துறை யில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், பட்டியல் சாதி மக்களின் வாழ்நிலை, மேம்பாட்டிற்காக செயல்படுத்தும் திட்டங்கள், அவற்றின் தாக்கம் குறித்து ஒவ் வொரு ஆண்டும் நாடாளுமன்றம், சட்ட மன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கை சாசனம்
பொதுச் சொத்துக்களில், வளங்களில் பட்டியலின மக்கள் சமத்துவப் பங்கினைப் பெற்றிட சட்டம் இயற்ற வேண்டும். நிலச் சீர்திருத்தம் செய்து நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் தர வேண்டும், பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர வேண்டும், கொத்தடிமை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் - 1976ஐ உறுதியான முறையில் அமல்படுத்த வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறைமையை அடியோடு ஒழிக்க வேண்டும்.
தொழில், அரசு கொள்முதல், ஒப்பந்தங்கள், வணிகம் ஆகியவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெற்று, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும், கல்விநிலையங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைத் தடுக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்புக!
அரசுத் துறைகளில் உள்ள நிலுவை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மீட்க வேண்டும், நீதித் துறையின் அனைத்து மட்டங்கள், பாதுகாப்புத் துறை களில் இட ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒன்றிய அரசு முறையாக அமல்படுத்தி, கூலி பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும்; இத்திட்டத் தில் வேலை நாட்களை 200 நாட்களாகவும், கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்
சாதிமறுப்பு திருமணங்களை ஊக்குவித்திடுக!
பழங்குடி வன்கொடுமை (தடுப்பு)ச் சட்டத்தை நீர்த்துப் போகாத வகையில் அமலாக்க வேண்டும்; அனைத்து மாவட்டங் களிலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதி ஆணவப் படுகொலை களைத் தடுத்திட தனி சிறப்புச் சட்டம் ஏற்றி, சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்.
தலித் பெண்களுக்கு சம உரிமை
தலித் பெண்களின் சமத்துவ உரிமை அனைத்துத் தளங்களிலும் உறுதி செய்ய வேண்டும், நவீன குலக்கல்வி திட்டமான ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் கருத்தை திரட்டுதல்
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மாதங்கள் பிரச்சாரம் செய்யப்படும். பொதுச் சமூகத்துடன் உரையாடல்களை நடத்து வது, மக்கள் கருத்தை ஒன்றுதிரட்டி கோரி க்கை சாசனத்தை ஏற்க செய்வதென்றும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டிற்கு தமிழ்மாநில விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்க பொதுச் செய லாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட், துணைத்தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம், தமிழ்மாநில விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.பாஸ்கர், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் த.செல்லகண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.சிவா மற்றும் அ.ராமமூர்த்தி (தலித் உரிமைகள் இயக்கம்), வன்னி அரசு (விசிக), இரா.அதியமான் (ஆதிதமிழர் பேரவை), கு.ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி), நாகை. திருவள்ளுவன் (தமிழ்ப்புலிகள் கட்சி), ஆதவன் (மக்கள் அதிகாரம்), ச.கருப்பையா (தலித் விடுதலை இயக்கம்) உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மக்கள் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.