tamilnadu

img

திறந்தவெளி சிறையானது காஷ்மீர் சென்னை கருத்தரங்கில் சுபாஷினி அலி பேச்சு

சென்னை, ஆக.16- மனு தர்மத்தை சட்டமாக்கிட முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் புதனன்று (ஆக.14) ராயபுரத்தில் வீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுபாஷினி அலி பேசியதாவது: இந்தியா பொருளதாரம், கல்வி, அறிவியல் துறையில் வளர்ந்திருப்பதற்கு அரசியலமைப்புச் சட்டக் கூறுகளும், மதசார்பற்ற தன்மையுமே காரணம். பாகிஸ்தானின் அரசியல், பொருளாதார நிலைத் தன்மை பலவீனமாக இருப்பதற்கு மத அடிப்படைவாதமே காரணம். இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டிய மத்திய பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் (மநுநீதி) கொள்கையை அமல்படுத்த துடிக்கிறது. முஸ்லீம், தலித் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தை சீர்குலைத்துள்ளது. அரசை விமர்சிப்பவர்களை பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசின் சட்டத் திருந்தங்கள், நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தேசிய வரைவு கல்விக் கொள்கை அரசு கல்வி நிலையங்களை மூடும் சரத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அரசு பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம், மருத்துக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற அனைத்தும் தனியாரிடம் சென்றுவிடும். ஏழை, நடுத்தர மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறும். காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதற்கு மாறாக, அங்குள்ள மக்களை அந்நியராக பாவித்து ஆட்சியாளர்கள் சர்வாதிகார ரீதியாக முடிவுகளை எடுக்கிறது. தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டு காஷ்மீர் திறந்தவெளி சிறைச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், பெண் சுதந்திரம், சிறுபான்மை மக்கள் நலன் காக்கவும் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். சுபாஷினி அலியின் ஆங்கில உரையை அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி மொழிபெயர்த்தார். இந்தக் கருத்தரங்கிற்கு மாதர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச் செயலாளர் பி. சுகந்தி, சிறுபான்மை நலக்குழு மாவட்டத் தலைவர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். ராணி, வடசென்னை மாவட்ட பொருளாளர் எம். கோட்டீஸ்வரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ். சரவணச்செல்வி, செயலாளர வி.தனலட்சுமி, பொருளாளர் சித்ரகலா, ராயபுரம் பகுதி நிர்வாகிகள் எஸ்.பவானி, ஜே.பிரேமாவதி, எம்.வரலட்சுமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு பொருளாளர் டி.வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக பாப்பு வரவேற்றார்.

;