tamilnadu

img

எல்.ஐ.சி பங்குகளை விற்கும் மோடி அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துக....

சென்னை:
எல்.ஐ.சி பங்குகளை விற்கும் மோடி அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எல்.ஐ.சி அதிகாரிகள்- வளர்ச்சி அதிகாரிகள்- ஊழியர்கள் சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிகள் சங்கம், தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் விடுக்கப் பட்டுள்ள அறிக்கை வருமாறு:எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலக்கலுக் கான பணிகளை மத்திய அரசு துவக்கியுள்ள செய்தி எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றுகிற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.   மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிற முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத்துறை (DIPAM) பங்கு விலக்கலுக்கு முந்தைய பரிவர்த்தனைப் பணிகளில்ஆலோசகர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக ஒரு முன்மொழிவு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. இந்தியாவின் பெருமைமிக்க அரசு நிதி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக அமையவிருக்கின்றன என்பது தெரிகிறது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின்படியே எல்.ஐ.சி நிறுவனம் உருவாக்கப் பட்டது.  

பாலிசிதாரர்களிடமும், இந்திய பொருளாதாரத்திலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் தற்போது நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடைபெறாமலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.  1956 ஆம் ஆண்டு எல்.ஐ.சி நிறுவனம் உருவான திலிருந்தே நாட்டின் தொழில்மயமாக்கலிலும், நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் அதனுடைய இன்றியமையாத பங்களிப்பு தாங்கள் அறிந்ததே.  எல்.ஐ.சியின் வளர்ச்சி,அதிக எண்ணிக்கையிலான பாலிசிதாரர் களைக் கொண்ட ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்திருப்பது மற்றும் அதிக எண்ணிக்கையிலான உரிமப்பட்டுவாடா என அனைத்தும் அந்நிறுவனத்தின் வளங்களி லிருந்து மட்டுமே செய்யப்பட்டுவருகிறது என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.  

1956 ஆம் ஆண்டு துவக்க முதலீடாக செய்த5 கோடி ரூபாய் பின்னர் 2011 ஆம் ஆண்டில் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளுக்கு ஏற்ப 100 கோடி ரூபாயாக உயர்த்தி யதைத் தவிர வேறு எந்த  கூடுதலான பங்களிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை.

தனியாருக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை
அரசின் இந்த குறைந்த முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் எல்.ஐ.சி இன்று 32 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.பாலிசிதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டே இந்த விரிவாக்கங்கள் நடைபெற்று வருகிற காரணத்தால் எல்.ஐ.சி நிறுவனம் ஒரு பரஸ்பர நிதி நிறுவனம் போல்செயல்பட்டு வருகிறது.  எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மேற்கொள்கிற போது மத்திய அரசு இந்த முக்கியமான உண்மையை கவனத்தில் கொள்ளவில்லை.245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் நாட்டுடமையாக்குகிறபோது மக்களிடமிருந்து சிறு சேமிப்பைத் திரட்டி, பாலிசிதாரர்களின் பணத்திற்கான பாதுகாப்பையும், இலாபத்தையும் உறுதி செய்கிற அதே வேளையில் அதை நாட்டின் உள்கட்டமைப்பின் (INFRASTRUC TURE) நீண்ட கால முதலீடாக மாற்றுவது ஆகியவை அம் முடிவின் குறிக்கோள்களாக இருந்தன.  போற்றத்தக்க வகையில் அந்த நோக்கங்களை எல்.ஐ.சி நிறைவேற்றியும் வருகிறது.  தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் அந்த குறிக்கோள்களை சிதைத்துவிடும்.   

மக்கள் பணம் மக்கள் நலனுக்காக  என்றில்லாமல் பங்குதாரர்களின் உச்சபட்ச இலாபத்திற்கே இந்த நடவடிக்கை வழிவகுக்கிறது.  இது எல்.ஐ.சியின் 40 கோடி பாலிசிதாரர்களின் நலனுக்கானதோ அல்லது இந்திய பொருளாதாரத்தின் நலனுக்கானதோ அல்ல.  நாட்டின் பொருளாதாரத்தில் உள்நாட்டு சேமிப்பு (DOMESTIC SAVINGS) முக்கியமான பங்களிப்பை செய்து வருவதையும் அந்நிய மூலதனம் அதற்கு மாற்றாக விளங்க முடியாது என்பதையும் பொருளாதார அறிஞர்கள் பரவலாக ஏற்றுக் கொள்கின்றனர்.  நாட்டின் வளர்ச்சிக்கு அதிக வளங்கள் தேவைப்படுகிற சூழலில் உள்நாட்டு சேமிப்பின் மீது குறிப்பாக இல்ல சேமிப்புகள் (HOUSEHOLD SAVINGS) மீதான அரசின் கட்டுப்பாட்டை உறுதி  செய்ய வேண்டும்.
மிகச் சிறந்த இந்த நிறுவனத்தை உருவாக்கிட மிகப் பெரும் பங்களிப்பை செய்து வருகின்ற அதன் பணியாளர்கள் மத்திய அரசு உத்தேசித்துள்ள பங்கு விலக்கலை எதிர்ப்பது மதிக்கத்தக்கதும், நியாயமானதும்  ஆகும்.  எல்.ஐ.சி நிறுவனம் அரசின் 100 சதவீத கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். மக்களின் சேமிப்புகளின் மீது அரசின் கட்டுப்பாடுகள் இருக்கும் போது மட்டுமே அதனை நாட்டின் வளர்ச்சிக்கு  மடைமாற்றம் செய்ய முடியும் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது.  உள்நாட்டு சேமிப்பின் மீதானதனியார் துறையின் கட்டுப்பாடுகள் தனியாரின் இலாபத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.    இன்றும் குறைந்த வருமானமே உள்ள நாடு நமது நாடு என்கிற உமையை கருத்தில்  கொண்டு ஏழை எளிய மக்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான இடை மானிய ஏற்பாடு (CROSS SUBSIDIZATION) ஆகியவற்றிற்காக இன்சூரன்ஸ் துறையில் அரசின் ஏகபோகம் தொடர வேண்டும்.

நாட்டின் பொருளாதார நலனுக்காகவே எங்கள் குரல் 
பங்கு விற்பனைக்கு எதிரான எங்களது வாதங்கள்  நாட்டின் பொருளாதார நலனுக்காகவே அன்றி  வேறு எந்த குறுகிய நலனுக்குமானது அல்ல.  எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனை இந்திய பொருளாதாரத்தின் மீதும் இந்திய மக்களில் ஏழை எளிய மக்களின் மீதும்  மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.   பலவீனமான சாமானிய மக்களுக்கு காப்பீட்டைக் கொண்டு செல்லும் சமூக நோக்கத்திற்கு இது மிகப் பெரிய பின்னடவை ஏற்படுத்தும்.  இலாபம் தராத கிராமப் புறங்களுக்கும் காப்பீட்டை பரவலாக்குகிற நோக்கமும் சிரமத்திற்கு ஆட்படும். எனவே எல்.ஐ.சியின் தற்போதைய தன்மையை மாற்றுவது இந்திய பொருளா தாரத்திற்கும், துன்பத்திற்குள்ளாகிற பிரிவின ருக்கும் ஊறு விளைவிக்கும்.மேற்கண்ட இத்தகைய சூழலில் எல்.ஐ.சியின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளை நீர்த்து போகச் செய்வதற்கும் , எல்.ஐ.சி நிறுவனத்தை 100 சதவீதம் அரசு நிறுவனமாக தக்க வைத்துக் கொள்ளவும்  நாங்கள் நடத்துகிற போராட்டங்களுக்கு தங்களுடைய கட்சியின் ஆதரவை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;