tamilnadu

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம்.... முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்...

சென்னை:
கலவரங்களை உருவாக்குகிறவர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க ‘தமிழ்நாடு அமைதி பாதுகாப்பு சட்டம்’ என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்கள் தலைமையில் வீறுநடைபோடும் தமிழகத்தின் வெற்றி பயணத்தை விரும்பாத சிலர் இந்த ஆட்சியில் முனைப்பையும், கவனத்தையும் சிதறடித்து திசை திருப்ப முயற்சிக்கின்றனர். சாதி, மதம், மாவட்டம் கடந்து ஏழரை கோடி தமிழக மக்களையும் ஒரே அடையாளத்துடன் ஒன்றிணைக்கவும், ஒற்றுமைப்படுத்தவும் தாங்கள் எடுக்கும் முயற்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பொறுக்காதவர்கள் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிராந்தியத்தின் பெயராலும் பிரித்தாள சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள்.

மத உணர்வுகளை தூண்டி விட்டு மக்கள் மத்தியில் மத துவேசத்தை வளர்க்க முயற்சிக் கிறார்கள். மக்கள் மனதில் வெறுப்பு விதைகளை தூவுகிறார்கள். அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பேச்சு, சகோதர மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தது என்பதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது பேச்சை, தமிழ்நாட்டு கத்தோலிக்க பேராயர், பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி கண்டித்ததுடன், மத நல்லிணக்கத்தை பேணவும், சமூக அமைதியை உருவாக்கவும் தாங் கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக் கும் கத்தோலிக்க சமூகத்தின் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் இருக்கும் இடத்தில் சில சமூக விரோதிகள் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இது தமிழகத்தில் மத மோதலை உருவாக்க சிலர் கங்கணம் கட்டி செயல்படுவதை உறுதி செய்கிறது. தேவையற்ற சமூக பதற்றங்களை உருவாக்குவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.இதுபோன்ற சாதி, மத மோதல்களை உருவாக்குவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கலவரங்களை உருவாக்குகிறவர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க ‘தமிழ்நாடு அமைதி பாதுகாப்பு சட்டம்’ என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.அது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரண சட்டமாக அமையும். அமைதியை குலைக்க திட்டமிட்டு செயல்படுபவர்களை தடுத்து சமூக நீதியை உருவாக்கவும், மாவட்ட கலெக்டர்களுக்கும், போலீசாருக்கு உதவவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நல்லிணக்கக் குழுக் களை நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் சமாதான தூதுவர்களாக செயல்படுவார்கள். தங்கள் வழிகாட்டலிலும், வழிநடத்துவதிலும் தமிழகம் முன்னேற்ற பாதையில் உச்சங் களை தொடுவது உறுதி.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார். 

;