tamilnadu

img

தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு  

தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 488 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,823 பதவியிடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று(பிப்.19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அதனைதொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை(பிப்.22) நடைபெற்று அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

அதன்படி, சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059, வண்ணாரப்பேட்டை 179 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174, மதுரை திருமங்கலம் நகராட்சி 17 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள் 16M, 16W, திருவண்ணாமலை நகராட்சி 25 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள்  57M, 57W ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.  

மேலும் வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் 6 மணிவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாக்களிக்க அனுமதிப்படுவர்.  அதனைதொடர்ந்து மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;