சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றின் திசை வேக மாறுபாட்டால் தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ள தாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.