tamilnadu

img

ஜனவரியில் ராகுல்-ஸ்டாலின் பிரச்சாரம்...

சென்னை:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு தமிழகம் வருகை தரும் ராகுல்  மு.க.ஸ்டாலினுடன் பிரச்சாரம் செய்கிறார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல்நெருங்கி வருவதால் தேர்தலை எவ்வாறுஎதிர் கொள்வது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதன் தொடர் நடவடிக்கையாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கடந்த 30 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் மூத்த தலைவர்கள் பேசினர். அப்போது தமிழக தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திப்பது, பிரச்சார முறை, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் சந்தித்தனர். அப்போது தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பின் போது, நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலினுடன் ராகுல்காந்தியும் இணைந்து பிரச்சாரம் செய்வது குறித்தும், அதற்கான தேதியை முடிவு செய்வது பற்றியும் பேசப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தேர்தல்பிரச்சாரம் செய்வதற்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருகிறார். அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு ராகுல் தமிழகம் வருகிறார். அப்போது ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே வேனில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களைவிட வேன் பிரச்சாரத்தில் அதிக மக்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். கிராமங்களுக்கும் செல்ல முடியும். முதல் பிரச்சாரத்தை எங்கு தொடங்குவது? எந்த வழியாக சென்று மக்களை சந்திப்பது? என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

;