tamilnadu

சித்தூர் - தச்சூர் ஆறு வழி சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், ஜூலை 5-   விவசாயம் மற்றும் நீர் நிலைகளை அழித்து விட்டு புதியதாக கொண்டு வரும் சித்தூர்-தச்சூர் நெடுஞ்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர். சித்தூர் முதல் தச்சூர் வரை ஆறு வழி நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி முன்னிலையில் வெள்ளியன்று (ஜூலை 5) ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது. சித்தூர் முதல் தச்சூர் வரை, 126.550 கி.மீ. நீளமுள்ள அதிவேக நெடுஞ்சாலை சென்னை புறவழிச்சாலை திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 5-ல் முடிவடைகிறது. இந்நெடுஞ்சாலையானது ஆந்திர மாநிலத்தின், சித்தூர் மாவட்டம் வழியாக 75 கி.மீ. நீளத்திலும், தமிழ்நாட்டில்  திரு வள்ளூர் மாவட்டம் வழியாக 51.55 கி.மீ. நீளத்தி லும் செல்கிறது.  பள்ளிப்பட்டு (16.7 கி.மீ.), ஊத்துக்கோட்டை (30.100 கி.மீ.), பொன்னேரி (04.75 கி.மீ.) நீளத்திற்கு இந்த ஆறு வழிச் சாலையானது செல்கிறது.  நெடுஞ்சாலை செல்லும் இத்திட்டத்தில் 4 முக்கிய பாலங்களும், 20 சிறிய பாலங்களும், 199 பெட்டி பாலங்களும் அமையவுள்ளது. இத்திட்டத்தின் கட்டுமானச் செலவு ரூ. 1273.38 கோடி ஆகும் என கூறப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக ஊத்துக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொது மக்கள் திரளாக பங்கேற்று தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். ஆறு, ஏரிகள், குளங்கள், வரவு கால்வாய்கள், வீடுகள், கிணறுகள், மின் இணைப்புகள், காடுகள், மரங்கள், விவசாய நிலங்கள் என ஏராளமான பாதிப்பு ஏற்படும். பாதிப்புக்களை அரசு  குறைத்து காண்பித்து மக்களை ஏமாற்றுகிறது.பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான திட்டம். விவசாயி களுக்கோ, விவசாய தொழிலாளர்களுக்கோ எந்த பயனுமில்லை என்றனர். இருக்கின்ற சாலையையே விரிவு படுத்தினாலே போதுமானது.புதிய 6-வழிச்சாலை வேண்டாம். இந்த திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,  கிராமப் பொதுமக்கள் அனைவரது கருத்துக்களும் முழுமையாக ஒளி மற்றும் ஒலி (வீடியோ மற்றும் ஆடியோ) பதிவு செய்யப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல் வனம்  அமைச்சகத்தின் பரிசீலனைக்கு கொண்டுச் செல்லப்படும். பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

;