மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அவர்களும் நேரில் சந்தித்தனர்.
அப்போது அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்ட கடிதத்தினை வழங்கினர்.
அதற்கு அவர் மதுரை ஏற்கெனவே கஸ்டம்ஸ் விமான நிலையமாக இருப்பதால் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்றார். மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளதாகவும் , வட மாநிலங்கள் சிலவற்றில் ஒன்று தான் இருப்பதாகவும் கூறினார்.
அதேபோல் BASA ஒப்பந்தத்தில் இணைப்பு மையமாக இந்தியாவின் எந்த விமான நிலையத்தையும் இனி இணைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே ஏராளமான விமான நிலையங்களை இணைத்து விட்டோம். எனவே மதுரையை இணைக்க முடியாது என தெரிவித்தார்.
மதுரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்குவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என்றார்.
கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி.சிதம்பரம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுச்சாமி ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் , ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.