tamilnadu

பிரணாப், வசந்தகுமார், அன்பழகன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

சென்னை:
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் திங்களன்று (செப்.14) தொடங்கியது.சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நடப்பு மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

பிரணாப் முகர்ஜி நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் திறம்பட பணியாற்றினார். மத்திய அரசின் உயர் விருதுகளான பாரத ரத்னா, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்ற பெருமைக்குரிய தலைவர் பிரணாப் முகர்ஜியை இழந்து வாடும் அவரது குடும் பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழ் நாடு பேரவை தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை  தனபால் வாசித்தார்.ஜெ.அன்பழகன், எச். வசந்தகுமாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் இப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக பேரவைத் தலைவர் தனபால் வாசித்த இரங்கல் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் உறுப்பினர்கள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.கோபாலன் கம்பம் தொகுதி, கு. லாரன்ஸ் பத்மநாபபுரம், ஜெமினி கே. ராமச்சந்திரன் ஆரணி, கே.என்.லட்சுமணன் மயிலாப்பூர், ஜான் வின்சன் நாங்குநேரி, காளான் வில்லிவாக்கம். சுப்பிரமணிய ஆதித்தன் என்கிற சுப்பிரமணியன் திருச்செந்தூர், பூ.கிருஷ்ணன் விழுப்புரம், ஆர்.சுந்தர்ராஜன் மதுரை மத்தி, குழந்தை தமிழரசன் விருதாச்சலம். அம்பிகாபதி மன்னார்குடி, ராஜம்மாள் தூத்துக்குடி, அ. அஸ்லம் பாஷா ஆம்பூர், மாரி அய்யா புதுக்கோட்டை, பாலகிருஷ்ணன் சிவகாசி, ஓ. எஸ். வேலுச்சாமி ஒட்டப்பிடாரம். வ. சுப்பையா திருமயம், னையினா முகமது கடையநல்லூர், சீனிவாசன் போளூர், அய்யாசாமி தாராபுரம், நா.சண்முகம் சோளிங்கர்  ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. இதன்பின்னர்  உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு மணித்துளிகள் மௌன அஞ் சலி செலுத்தினர். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயரிழந்தவர்களுக்கும் சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு
தங்களது இன்னுயிரையும் துச்சமென கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களின் சேவை பாராட்டத்தக்கது என்று பேரவைத் தலைவர் கூறினார்.தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பலியான ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை இழந்து வருந்தும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

;